செப்.15-ம் தேதிக்குப் பிறகு பல்கலைக்கழக இறுதிப் பருவத் தேர்வு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, September 1, 2020

செப்.15-ம் தேதிக்குப் பிறகு பல்கலைக்கழக இறுதிப் பருவத் தேர்வு

செப்.15-ம் தேதிக்குப் பிறகு பல்கலைக்கழக இறுதிப் பருவத் தேர்வு

அனைத்துப் பல்கலைக்கழகங்களின் இறுதியாண்டு பருவத் தேர்வு செப்.15-ம் தேதிக்குப் பின் கட்டாயம் நடக்கும். மாணவர்கள் நேரில் வந்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக இருக்க வேண்டும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.


கரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் 8-வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்குத் தேர்வு ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது

ஆனால், யுஜிசி அமைப்பு கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர்களை ரத்து செய்ய மறுத்துவிட்டது. கட்டாயம் நடத்தியே ஆகவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் தெரிவித்துவிட்டது. இதனால் செப்டம்பருக்குள் தேர்வை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் செப்டம்பருக்குள் இறுதிப் பருவத் தேர்வை நடத்த மாநிலங்களின் உயர் கல்வித்துறை கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து தற்போது உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பல்கலைக்கழக இறுதித் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பு:

பல்கலைக்கழகங்களில் இறுதிப் பருவத் தேர்வு செப்டம்பர் 15-ம் தேதிக்குப் பிறகு நடைபெறும். உயர்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டுவரும் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் பயிலும் மாணவர்கள் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான இறுதிப் பருவத் தேர்வு செப்டம்பர் 15-ம் தேதிக்குப் பிறகு நடத்தப்பட உள்ளது.


இதற்கான விரிவான தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு மையங்கள் விரைவில் வெளியிடப்படும். மேற்படி இறுதி ஆண்டுத் தேர்வுகள் மாணவர்கள் நேரில் வந்து எழுதக்கூடிய தேர்வாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மாணவர்கள் தேர்விற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்

மேலும், பி.ஆர்க் (B.Arch) எனப்படும் கட்டிட அமைப்பியல் இளநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 7-ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. பி.ஆர்க் (B.Arch) இளநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 7-ம் தேதி முதல் www.tneaonline.org என்ற இணையதளத்தில் தங்கள் பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment