நியூயார்க் முதல் கீழக்கோட்டை வரை: 'இந்து தமிழ்' செய்தி எதிரொலியால் 7 நாட்களில் கையெழுத்தை அழகாக்கும் மாணவர்கள்! - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, September 2, 2020

நியூயார்க் முதல் கீழக்கோட்டை வரை: 'இந்து தமிழ்' செய்தி எதிரொலியால் 7 நாட்களில் கையெழுத்தை அழகாக்கும் மாணவர்கள்!

 நியூயார்க் முதல் கீழக்கோட்டை வரை: 'இந்து தமிழ்' செய்தி எதிரொலியால் 7 நாட்களில் கையெழுத்தை அழகாக்கும் மாணவர்கள்!


தினசரி ஒரு மணி நேரம் என ஏழு நாட்கள் கேலிகிராஃபி பயிற்சி வழங்கி, கிறுக்கலான ஆங்கிலக் கையெழுத்தையும் அழகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் அரசுப் பள்ளி அன்பாசிரியர் பூபதி அன்பழகன்.


கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரியும் இவரின் கையெழுத்துப் பயிற்சி குறித்த செய்தி 'இந்து தமிழ்' இணையத்தில் வெளியானது.


இதைப் படித்துவிட்டு 250-க்கும் மேற்பட்டோர் தன்னைத் தொடர்புகொண்டு பேசியதாகப் பெருமிதம் கொள்கிறார் ஆசிரியர் பூபதி அன்பழகன்.


இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், ''இந்து தமிழ் இணையச் செய்தியைப் படித்துவிட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 400-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கையெழுத்துப் பயிற்சியை எடுத்துக் கொண்டனர். கரோனா கால விடுமுறையில் சிறுவயதுக் குழந்தைகளும் ஆர்வத்துடன் இதைக் கற்றனர்.


குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான அழைப்புகள் வந்தன. நியூயார்க்கில் இருந்து விஹான் என்னும் 3-ம் வகுப்பு மாணவர் வாட்ஸ் அப் மூலம் பயிற்சி எடுத்துக்கொண்டு அசத்தலாக எழுதுகிறார். மும்பையில் இருந்து 7 வயதுச் சிறுவன் கவின், கனடாவில் வசிக்கும் 3-ம் வகுப்புச் சிறுமி சக்தி யாழினி, 10 வயது துபாய் சிறுமி சாரா என இவர்களின் பட்டியல் நீள்கிறது.


செய்தி பார்த்துவிட்டு சிங்கப்பூர், மஸ்கட்டில் இருந்தும் கையெழுத்துப் பயிற்சி பெற்றனர். இதில் குவைத்தில் வசிக்கும் பிருந்தா என்பவரின் மகளும் 1-ம் வகுப்புச் சிறுமியுமான வைசிகாவின் கையெழுத்து இன்னும் கண்களிலேயே நிற்கிறது. வழக்கமாக 8 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்குத்தான் பயிற்சி அளிப்பேன். ஆனால், அவர் 5 வயதிலேயே ஆர்வத்துடன் கற்றார்.


சென்னையில் தனியார் பள்ளி முதல்வரான தனது அம்மாவிடம் இருந்து தானாகவே கற்றுக்கொண்டு எழுதும் சிறுவன் முகில், மதுரை ஆசிரியர் ராணி குணசீலி என ஒரே மாதிரி அச்சில் வார்த்தாற்போல எழுதும் நபர்களின் பட்டியல் நீள்கிறது


புரொஜெக்டர் வழியாகப் பயிற்சி


அதேபோல ராமநாதபுரம், திருவாடானை, கீழக்கோட்டையில் உள்ள மாணவர்களுக்கு புரொஜெக்டர் வழியாகக் கையெழுத்துப் பயிற்சி அளிக்கப்பட்டது. கீழக்கோட்டையைச் சேர்ந்த மென்பொறியாளர் விவேகானந்த பாரதி, சமூக ஆர்வலர் முருகேசன் ஆகிய இருவரும் தங்கள் கிராமத்தில் மரம் நடுதல், அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட தன்னார்வச் செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள மாணவர்களுக்குக் கல்வியின் முக்கியத்துவத்தை, தேவையை உணர்த்தி வருகின்றனர்.


இந்து தமிழ்' செய்தியைப் படித்த பாரதி, ஊரில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சி கொடுக்க ஆசைப்பட்டார். எல்லாக் குழந்தைகளுக்கும் போன் சாத்தியமில்லை என்பதால் வீடியோ ப்ரொஜெக்டர் மூலமாக வீடியோவைப் போட்டுக் காட்ட முடிவெடுத்தார். தற்போது கீழக்கோட்டையைச் சேர்ந்த 35 மாணவர்களும் கையெழுத்துப் பயிற்சி எடுத்து வருகின்றனர்.


இஸ்ரோ நிறுவனத்தில் திருவனந்தபுரக் கிளையில் ராக்கெட் பொறியாளராகப் பணியாற்றி வரும் விஞ்ஞானி கார்த்திகேயன் 'இந்து தமிழ்' செய்தியைப் பார்த்துவிட்டு, தற்போது ஆர்வமுடன் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்


அரசுப் பள்ளிகள் முழுக்க இந்த முறையை முன்னெடுத்து, அனைத்து மாணவர்களின் கையெழுத்தையும் அழகாக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை'' என்றார் அன்பாசிரியர் பூபதி.

1 comment:

  1. Sir I want to get the Teacher Boopathi's contact number. Please help me.

    ReplyDelete