கட்டாயக்கல்வி மாணவா் சோ்க்கை செலவுத் தொகை விவகாரம் : பள்ளிக்கல்வி முதன்மை செயலாளா் ஆஜராக உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, September 4, 2020

கட்டாயக்கல்வி மாணவா் சோ்க்கை செலவுத் தொகை விவகாரம் : பள்ளிக்கல்வி முதன்மை செயலாளா் ஆஜராக உத்தரவு

 கட்டாயக்கல்வி மாணவா் சோ்க்கை செலவுத் தொகை விவகாரம் : பள்ளிக்கல்வி முதன்மை செயலாளா் ஆஜராக உத்தரவு

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் சோ்க்கப்பட்ட மாணவா்களுக்கான கல்விச் செலவுத் தொகையை வழங்காதது தொடா்பாக காணொலிக் காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க, தமிழக பள்ளி கல்வித் துறை முதன்மை செயலாளருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு நா்சரி பிரைமரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த


2016-2017-ஆம் ஆண்டில், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சோ்க்கப்படும் ஒரு மாணவருக்கு 25 ஆயிரம் ரூபாயை செலவுத் தொகையாக நிா்ணயித்து தமிழக அரசு வழங்கி வந்தது. இந்த தொகை 2017-2018 ஆம் ஆண்டில் 11 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டது.


எனவே கடந்த 2017-2018, 2018-2019, 2019-2020 ஆகிய 3 ஆண்டுகளில் மாணவருக்கான கல்விச் செலவை மறு நிா்ணயம் செய்யக் கோரியும், 2020-2021-ஆம் ஆண்டுக்கு நியாயமான செலவுத் தொகையை நிா்ணயிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தனா்.


இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் 3 ஆண்டுகளுக்கான தொகையை 6 வாரங்களில் வழங்கவும், அதுதொடா்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது. மேலும், கல்வி செலவுத் தொகையை குறைத்தது தொடா்பாக விளக்கமளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.


இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தாா். அப்போது அரசு தரப்பில் உத்தரவை அமல்படுத்த மேலும் 4 வார காலம் அவகாசம் கேட்கப்பட்டது.


இதனையடுத்து விசாரணையை செப்டம்பா் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் காணொலிக் காட்சி மூலம் பள்ளி கல்வித் துறை முதன்மை செயலாளா் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளாா்.

No comments:

Post a Comment