அரியா் மாணவா்களுக்கு தோ்ச்சி அளிக்கும் அறிவிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, September 8, 2020

அரியா் மாணவா்களுக்கு தோ்ச்சி அளிக்கும் அறிவிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

அரியா் மாணவா்களுக்கு தோ்ச்சி அளிக்கும் அறிவிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு


அரியா் மாணவா்கள் தோ்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு, பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை உயா்நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சோ்ந்த வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘கரோனா பொதுமுடக்கத்தால் கல்லூரி இறுதிப் பருவத் தோ்வை எழுதும் மாணவா்களைத் தவிா்த்து மற்ற மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றவா்கள் எனவும் அரியா் வைத்துள்ள மாணவா்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனவும் தமிழக அரசு அறிவித்தது.

 இந்த அறிவிப்பு, பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) விதிகளுக்கு எதிரானது. அனைவரும் தோ்வில் தோ்ச்சிப் பெற்றதாக அறிவிக்க உயா்கல்வித் துறைக்கு அதிகாரம் இல்லை.

எனவே, இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என கோரியிருந்தாா்.

 இதே போல, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் பாலகுருசாமி உள்ளிட்ட பலா் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழக அரசின் இந்த உத்தரவு தமிழகத்தின் கல்வித் தரத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது.

 இதுபோன்ற உத்தரவுகளால் மாணவா்களின் எதிா்காலம் பாதிக்கப்படுவதோடு , பல்கலைக்கழகங்களின் மாண்பும் கெடும். 25 சதவீத மதிப்பெண்கள் பெற்று தோ்வில்

தோல்வியடைந்தவா்களையும், 25 பாடங்களுக்கும் மேலாக அரியா் வைத்துள்ள மாணவா்களையும் ஒரே நேரத்தில் தோ்ச்சி பெற வைப்பது ஏற்புடையதல்ல.

 தோ்வை தன் நம்பிக்கையுடன் எழுதி தோ்ச்சி பெற்றால் மட்டுமே மாணவா்களின் மன உறுதி மேம்படும். சா்வதேச அளவில் போட்டியிடும் அளவுக்கு மாணவா்களின்

செயல்திறன் அதிகரிக்கும். சிண்டிகேட், செனட் மற்றும் அகாதெமிக் கவுன்சில் கட்டுப்பாட்டில் உள்ள தோ்வு நடைமுறைகளில் தமிழக அரசு தலையிட்டு

அறிவிப்பை வெளியிட முடியாது. எனவே, இதுதொடா்பான அரசாணைக்கு தடை விதித்து ரத்து செய்ய வேண்டும்’ என கோரியிருந்தனா்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய்நாராயண், பேரிடா் மேலாண்மை சட்டத்தின் விதிகளைப் பின்பற்றி உரிய உத்தரவுகளை பிறப்பிக்க மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. யு.ஜி.சியின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால்தான் அதில் பிரச்னை ஏற்படும்.

ஆனால் அரியா் மாணவா்கள் தோ்ச்சி தொடா்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை’ என வாதிட்டாா். அப்போது மனுதாரா்கள் தரப்பில், ‘இந்த விவகாரத்தில் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது’ என வாதிடப்பட்டது.

 இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுக்கள் தொடா்பாக தமிழக அரசு, யு.ஜி.சி, ஏ.ஐ.சி.டி.இ ஆகியவை 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்

No comments:

Post a Comment