'நீட்' தேர்வுக்கு வரும் மாணவியரிடம் தாலி அகற்றும்படி கூற தடை வருமா? - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, September 30, 2020

'நீட்' தேர்வுக்கு வரும் மாணவியரிடம் தாலி அகற்றும்படி கூற தடை வருமா?

 'நீட்' தேர்வுக்கு வரும் மாணவியரிடம் தாலி அகற்றும்படி கூற தடை வருமா?


மருத்துவ நுழைவு தேர்வு எழுத வரும் திருமணமான பெண்களிடம், தாலி, மெட்டியை அகற்றும்படி நிர்ப்பந்திக்க தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் அரவிந்த்ராஜ் தாக்கல் செய்த மனு:


மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்காக, 'நீட்' தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை, இந்த தேர்வை நடத்துகிறது. தேர்வு எழுதும் மாணவர்கள், சிலவற்றை மையத்துக்குள் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அறைக்குள் நுழையும் முன், அவர்களை முழுமையாக பரிசோதிக்கின்றனர். தேர்வு எழுத வரும் மாணவர்களை, மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.


 இதனால், மாணவர்களுக்கு அசவுகரியம் ஏற்படுகிறது. பெண்களை துன்புறுத்துகின்றனர். திருமணமான பெண்களிடம், தாலியை அகற்றும்படி கட்டாயப் படுத்துகின்றனர். மெட்டி, மூக்குத்தி, காதணிகளை கழற்றும்படி நிர்ப்பந்திக்கின்றனர்.


சர்வதேச விமான நிலையங்களில் கூட, பாதுகாப்பு சோதனையின் போது, தாலியை அகற்றும்படி கூற மாட்டார்கள். ஏனென்றால், அது ஒரு புனிதமான குறியீடு. 


தாலியை அகற்றும் படி கூறுவது, பெண்களின் உணர்வுகளை பாதிக்கும்; மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும். தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்க, இந்த நடைமுறைகளை பின்பற்றுவதாக கூறுகின்றனர். தேர்வு மையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன; கண்காணிப்பாளர்கள் உள்ளனர். சோதனை என்ற பெயரில், தேர்வு எழுத வருபவர்களிடம் நடத்தும் கெடுபிடியை நிறுத்த வேண்டும்.


எனவே, திருமணமான பெண்களிடம் தாலி, மெட்டி, மூக்குத்தி, காதணியை அகற்றும்படி கோருவதற்கு, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment