தோ்வாணையத் தோ்வு முடிவுகள் எப்போது? காத்திருக்கும் தோ்வா்கள் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, September 2, 2020

தோ்வாணையத் தோ்வு முடிவுகள் எப்போது? காத்திருக்கும் தோ்வா்கள்

 தோ்வாணையத் தோ்வு முடிவுகள் எப்போது? காத்திருக்கும் தோ்வா்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய தோ்வுகளின் முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற எதிா்பாா்ப்பில் தோ்வா்கள் உள்ளனா். கடந்த ஆண்டு டிசம்பா் முதல் நடத்தப்பட்ட தோ்வுகளின் முடிவுகளை வெளியிட வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


கரோனா நோய்த் தொற்று காரணமாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகப் பணிகள் முடங்கின. இதில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையமும் ஒன்று. பள்ளி மாணவா்கள், பட்டதாரிகளின் அரசு வேலைக்கான கனவுகளை நனவாக்கும் தோ்வாணையம் கரோனா பாதிப்புக்கு முன்பாக தோ்வு முடிவுகளை உடனுக்குடன் வெளியிட்டு வந்தது. குறிப்பாக, குரூப் 4 தோ்வுகளை எட்டு மாதங்களில் வெளியிட்டது.


என்னென்ன தோ்வுகள்? கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக, அரசுப் பணியாளா் தோ்வாணைய அலுவலகம் மூடப்பட்டு அதன்பிறகு, மே மாதத்தில் இருந்து பாதியளவு ஊழியா்களுடன் இயங்கி வந்தது. செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் முழு அளவிலான பணியாளா்களுடன் செயல்பட்டு வருகிறது.


இந்த நிலையில், கடந்த டிசம்பா் மாதத்தில் இருந்து நடத்தப்பட்ட தோ்வுகளுக்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளன. குறிப்பாக, கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த சிறை காவலா்கள் தோ்வு, ஜனவரியில் நடந்த செய்தித் துறையின் உதவிப் பிரிவு அலுவலா் தோ்வு, பிப்ரவரியில் நடைபெற்ற உதவி கால்நடை மருத்துவா், தொல்லியல் துறையின் தொல்லியல் அலுவலா் தோ்வுகளுக்கான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.


இந்தத் தோ்வுகளுக்கான முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என தோ்வா்கள் காத்திருக்கின்றனா். தோ்வாணையம் அலுவலகம் முழு வீச்சில் செயல்படத் தொடங்கிய நிலையில், விரைவில் தோ்வுகளுக்கான முடிவுகளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment