இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு நெல்லை பல்கலை. இறுதியாண்டு தேர்வுகள் தொடங்கும் தேதி அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, September 5, 2020

இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு நெல்லை பல்கலை. இறுதியாண்டு தேர்வுகள் தொடங்கும் தேதி அறிவிப்பு

 இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு நெல்லை பல்கலை. இறுதியாண்டு தேர்வுகள் தொடங்கும் தேதி அறிவிப்பு

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான இறுதி பருவத் தேர்வுகள் செப்.21 முதல் நடத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இருப்பவர்கள் இணையம் மூலமும் எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகளில் இறுதித்தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக மத்திய அரசு ஒத்திவைத்த நீட், ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படுகிறது. 

இதையடுத்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான இறுதியாண்டு தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ்பாபு கூறியிருப்பதாவது: பல்கலைக்கழகத்தில் இணைந்த கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை இறுதி பருவத்திற்கான தேர்வுக்கு உரிய முறையில் விண்ணப்பித்த நடப்பு மற்றும் தனித் தேர்வர்களுக்கு செப்.21ம் தேதி முதல் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

 முதுநிலை மற்றும் இளநிலை அறிவியல் மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும், இளநிலை கலை மற்றும் இளநிலை வணிகவியல் மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதல் 5 மணி வரையிலும் அவர்கள் பயின்ற கல்லூரியிலேயே தேர்வுகள் நடைபெறும்.


இறுதி பருவ தேர்வு எழுத வேண்டிய ஆய்வியல் நிறைஞர் மாணவர்களுக்கு செப்.23ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வுகள் நடத்தப்படும். அவர்கள் படித்த கல்லூரிகளுக்கு நேரில் வர இயலாத பட்சத்தில் மாணவர்கள் வசிக்கும் இருப்பிடங்களின் அருகில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் தேர்வு எழுத ஆவண செய்யப்படும். 

நெல்லை பல்கலைக்கழக அங்கீகாரத்திற்கு அப்பாற்பட்ட வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள் இணையதளம் மூலமாகவோ, அல்லது பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்யும் ஏதேனும் ஒரு தேர்வு மையத்திலோ தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.


இது குறித்து நெல்லை பல்கலைக்கழக எல்லைக்குட்பட்ட வேறு ஏதேனும் கல்லூரிகளில் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களும், இணையதளம் மூலம் அல்லது வேறு  மாவட்ட, மாநில மையங்களில் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களும் தாங்கள் பயின்ற கல்லூரியின் முதல்வரை உடனே தொடர்பு கொண்டு தங்கள் பெயரை செப்.10ம் தேதிக்கு முன்பு பதிவு செய்ய வேண்டும். கல்லூரி முதல்வர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் மட்டுமே மாற்று ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment