மருத்துவ படிப்பில் இந்த ஆண்டு ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, October 15, 2020

மருத்துவ படிப்பில் இந்த ஆண்டு ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்

 மருத்துவ படிப்பில் இந்த ஆண்டு ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்



‘மருத்துவ படிப்பில் இந்தாண்டு இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு (ஓபிசி) மாணவர்களுக்கு 50 சதவீதம் அல்லது 27 சதவீத இடஒதுக்கீட்டை கண்டிப்பாக வழங்க முடியாது,’ என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 


மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய தொகுப்பு மாநிலங்களால் வழங்கப்படும் இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி, திமுக, தமிழக அரசு, அதிமுக, பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம் ஆகிய கட்சிகளின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டது.


அதன்படி, இக்கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. இதை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வு, ‘ஓபிசி பிரிவினருக்கு மத்திய தொகுப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம். 


இது குறித்து, மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத் துறை செயலாளர்கள், இந்திய மருத்துவக் கவுன்சில் செயலாளர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து, மனுதாரர்களின் கோரிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். மேலும், இடஒதுக்கீட்டிற்கான புதிய சட்ட வரையறைகளை உருவாக்க வேண்டும்.


இந்த இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அடுத்த 3 மாதங்களில் மத்திய அரசு தனது முடிவை வெளியிட வேண்டும்,’ என கடந்த ஆகஸ்ட்டில் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஆலோசனை குழுவில், தமிழக அரசின் பிரதிநிதியாக ஐஏஎஸ் அதிகாரி உமாநாத் நியமிக்கப்பட்டார்.


 இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவின்படி இந்தாண்டே இடஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிடக் கோரி, தமிழக அரசு மற்றும் அதிமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த வழக்கில் இருதினங்களுக்கு முன் வாதிட்ட மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள ஆலோசனை குழுவின் கூட்டம், கடந்த மாதம் 22ம் தேதி நடந்தது. அதில் பங்கேற்ற தமிழக அரசு பிரதிநிதி, நடப்பாண்டில் ஓபிசி இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து வலியுறுத்தவில்லை.


 அடுத்தாண்டு (2021) அமல்படுத்துவது பற்றி மட்டுமே பேசப்பட்டது. நடப்பாண்டில் அதை அமல்படுத்துவது பற்றி தமிழக பிரதிநிதி எங்களிடம் ஆலோசிக்கவோ, வலியுறுத்தவோ இல்லை,’ என்று குற்றம்சாட்டினார்.


இந்த வழக்கில் கேவியட் மனுதாரரான மருத்துவர் டி.ஜி.பாபு தரப்பில் ஆஜரான திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன், ‘நீட் தேர்வு முடிவை 16ம் தேதி (இன்று) வெளியிடுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஓபிசி.க்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கான குழுவின் ஆலோசனையும் இன்னும் முடியவில்லை. 


அதனால், இந்த விவகாரத்தில் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கிற்கோ அல்லது ஆலோசனை குழுவுக்கோ எந்த பாதகமும் ஏற்படாதவாறு, நடப்பாண்டில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடாவது வழங்கும்படி உத்தரவிட வேண்டும்,’ என கோரினார்.


அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘ஓபிசி பிரிவினருக்கு நடப்பாண்டில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியுமா? அல்லது இது குறித்த ஆலோசனை இன்னும் முடியாததால், 27 சதவீத இடஒதுக்கீடாவது கொடுக்க முடியுமா? என்பது குறித்து வரும் வெள்ளிக்கிழமைக்குள் (இன்றைக்குள்) நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்,’ என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு கடந்த 13ம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் மத்திய அரசு நேற்று புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. 


அதில், ‘மத்திய தொகுப்பு இடங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பாண்டில் 50 சதவீதம் மட்டுமல்ல, 27 சதவீத இடஒதுக்கீட்டை கூட கண்டிப்பாக வழங்க முடியாது.


இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த ஆலோசனை கூட, 2021ம் ஆண்டிற்கானது மட்டுமே. நடப்பாண்டுக்கான இடஒதுக்கீடு பற்றி கிடையாது. 


மேலும், குழுவின் ஆலோசனையும் இன்னும் முழுமை அடையவில்லை. மேலும், நீட் தேர்வு முடிவு 16ம் தேதி (இன்று) வெளியாக உள்ளதால் நடப்பாண்டில் ஓபிசி,க்கு இடஒதுக்கீடு வழங்குவது சாத்தியம் கிடையாது,’ என திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.  


  

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா மற்றும் அஜய் ரஸ்தோகி அமர்வில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நேற்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இந்த ஆண்டிலேயே ஓபிசி இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்,’ என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. 


 இதேபோல், கேவியட் மனுதாரர் மருத்துவர் டி.ஜி.பாபு தரப்பில் ஆஜரான திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன், ‘உயர் நீதிமன்ற


ம் வழங்கி உத்தரவில், சுகாதாரத் துறை செயலாளர்களை ஆலோசனை குழுவில் நியமிக்க வேண்டும் என தெரிவித்தது. ஆனால், அதுபோல் யாரும் இந்த குழுவில் நியமிக்கப்படவில்லை. 


மேலும், ஓபிசி.க்கு நடப்பாண்டே இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால், தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த ஓபிசி மாணவர்களும் பயன் அடைவார்கள்,’’ என்றார்.


 அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். மேலும், அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வ வாதங்களை வரும் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.


* நடப்பாண்டில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடாவது வழங்கும்படி உத்தரவிட வேண்டும். நடப்பாண்டே இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால், தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த மாணவர்களும் பயன் அடைவார்கள். - கேவியட் மனுதாரர்


* நீட் தேர்வு முடிவு 16ம் தேதி (இன்று) வெளியாக உள்ளதால் நடப்பாண்டில் ஓபிசி.க்கு இடஒதுக்கீடு வழங்குவது சாத்தியம் கிடையாது. - மத்திய அரசு

No comments:

Post a Comment