மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, October 15, 2020

மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

 மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு


சென்னை மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள், மேம்பட்ட கல்வி முறை ஆகியவற்றால், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. 


தனியார் பள்ளிகளில் படித்து வந்த, 9,000 மாணவர்கள், மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.


தனியார் பள்ளிகளின் மீதான ஈர்ப்பு காரணமாக, மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சதவீதம் குறைந்து வந்தது.உட்கட்டமைப்பு வசதிகள்குறிப்பாக, 2009 ~ ~10 கல்வியாண்டில், 1.03 லட்சமாக இருந்த மாணவர்சேர்க்கை, படிப்படியாக குறைந்தது. எனவே, மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தவும், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும், மாநகராட்சி பல்வேறு திட்டமிடல்களை வகுத்தது.


முதற்கட்டமாக, அனைத்து மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள், தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றப்பட்டன. 


தமிழ்வழி கல்வியுடன் ஆங்கில வழி கல்வி மேம்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாநகராட்சி பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்புகளும் துவங்கப்பட்டன.


தன்னார்வ அமைப்புகள் உதவியுடன், மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு, ஆங்கிலவழி கல்வி கற்பிக்கப்பட்டது. 


இதன் காரணமாக, கடந்த கல்வியாண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படித்த மாணவர்கள், பெருவாரியாக தேர்ச்சி பெற்றனர்.மேலும், பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 


கல்வியை கைவிடும் நிலை


இதில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு உள்ளது. மடிக்கணினி இல்லாத, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாநகராட்சி சார்பில், 'ஸ்மார்ட் போன்கள்' வழங்கப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.


இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக, பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால், பல மாணவர்கள் கல்வியை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.


இதைத்தொடர்ந்து, மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், தங்கள் பகுதிக்கு உட்பட்ட குடும்பங்களில், பள்ளியில் சேராத மாணவர்கள் மற்றும் விடுப்பட்ட மாணவர்களை கண்டறிந்து, மாநகராட்சியின் கல்வி தரம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன் காரணமாக, இந்த கல்வியாண்டில், மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.


இது குறித்து, மாநகராட்சி உதவி கல்வி அலுவலர் முனியன் கூறியதாவது:மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், 2 லட்சம் குடும்பங்களை சந்தித்து, மாநகராட்சி பள்ளியின் உட்கட்டமைப்பு, கல்வி தரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதில், பள்ளியில் சேராத மற்றும் கைவிட்ட மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, வீட்டிலேயே மாணவர் சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டது.


மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களின் வழிக்காட்டுதல்படி, தனியார் பள்ளிகளில் படித்து வந்த, 9,000 மாணவர்கள் இதுவரை மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். தற்போது, 88 ஆயிரத்து, 84 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பள்ளி துவங்கும்போது, 90 ஆயிரத்தை நெருங்கி விடுவோம்.


சென்னையில், 46 மாநகராட்சி பள்ளிகள் முழுதும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கல்வி கற்கும் முறை கொண்டு வரப்பட உள்ளது. முதற்கட்டமாக,இரண்டு பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


 மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்ததற்கு, மாநகராட்சி கமிஷனர், இணை கமிஷனர் ஆகியோர் வழிக்காட்டுதல்களை வழங்கி, எங்களை அடிக்கடி பாராட்டி ஊக்குவித்தது முக்கிய காரணம்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment