'நீட்' தேர்வால் நான் டாக்டராகிறேன் : ஜீவித்குமார் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, October 17, 2020

'நீட்' தேர்வால் நான் டாக்டராகிறேன் : ஜீவித்குமார்

 'நீட்' தேர்வால் நான் டாக்டராகிறேன் : ஜீவித்குமார்


'நீட் தேர்வால் தான், நான் டாக்டராகிறேன்; தேர்வை கண்டு யாரும் பயப்பட தேவைஇல்லை,'' என, சாதனை படைத்த தேனி மாணவர் ஜீவித்குமார் தெரிவித்தார்.


அவர் கூறியதாவது: 


அரசு பள்ளியில் படித்த எனக்கு, டாக்டராக வேண்டும் என்ற ஆசை இருந்தது இல்லை. 'நீட்' தேர்வில் அப்படி என்ன தான் கஷ்டம் இருந்து விடப் போகிறது என, ஆசிரியர்கள் வழிகாட்டுதலில், 2019ல் தயாரானேன்; 193 மதிப்பெண் பெற்றேன். 'இன்னொரு ஆண்டு உன்னால் முடியும் என்றால், முயற்சி செய்' என, பெற்றோர், ஆசிரியர்களும் தன்னம்பிக்கை ஊட்டினர்.


 ஆங்கில ஆசிரியர், வகுப்பாசிரியர்கள், தலைமை ஆசிரியர் இணைந்து எனக்கு உதவி, ராசிபுரம் பயிற்சி மையத்தில் சேர்த்தனர்.


அங்கு ஆந்திராவை சேர்ந்த ஆசிரியர்கள் இருந்ததால், தமிழில் கற்றுக்கொள்ள இயலவில்லை. சிரமப்பட்டு நானும், ஆங்கிலத்தில் கற்பதில் புரிந்து படிக்க ஆரம்பித்தேன். உயிரியல் பாடத்தில், வார்த்தைகளை புரிந்து கொள்வதில், மிகுந்த சிரமம் இருந்தது. 


செல்லம்மாள் என்ற ஆசிரியை, ஓராண்டு முழுவதும் தமிழில் மொழிமாற்றம் செய்து சொல்லிக் கொடுத்தார். அதனால், 2020 நீட் தேர்வில் வெற்றி பெற்று, 664 மதிப்பெண் எடுத்து, அகில இந்திய அரசு பள்ளி மாணவர்களில், முதல் மாணவராக தேர்வாகியுள்ளேன். நீட் தேர்வு அவசியம்; 


அது இல்லாவிட்டால், எனக்கு இந்த வாய்ப்பு எட்டாக்கனியாகி இருக்கும்.சென்னை மருத்துவக் கல்லுாரி அல்லது ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரியில், மருத்துவம் படிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். 


ஜீவித்குமார் தந்தை நாராயணமூர்த்தி கூறியதாவது:சிறுவயது முதலே நன்றாக படிப்பான்.


 பிளஸ் 2 தேர்வுக்கு முன்பிருந்தே, அதிகாலை, 4:00 மணி முதல், 8:00 மணி வரையும், பள்ளி முடிந்து வந்த பின், இரவு, 10:00 மணி வரையும் படிப்பான்.அவனது திறமையால் இந்த உயரத்தை எட்டியுள்ளான். டாக்டராகி பல நன்மைகள் செய்வான். இவ்வாறு அவர் கூறினார்.


தாய் பரமேஸ்வரி கூறியதாவது:என் கணவர், சென்னை தியாகராயர் நகரில், ஜூஸ் கடையில் தினக்கூலியாக பணிபுரிந்தார். 


கொரோனாவுக்கு முன், இங்கு வந்து ஆடு மேய்க்கும் தொழில் செய்கிறார்.எங்களை போன்றவர்களுக்கு மருத்துவப் படிப்பு கனவு. எங்களது மகன் டாக்டராக போவதை நினைத்து மனம் மகிழ்ச்சியாக உள்ளது.


 மோகன், தலைமை ஆசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, சில்வார்பட்டி: அரசு பள்ளி மாணவர்களை குறைத்து மதிப்பிடாமல், உரிய வழிகாட்டலோடு உதவியும் செய்தால், எதையும் சாதிப்பர் என்பதற்கு எங்களது மாணவர் சிறந்த உதாரணம். 


எங்கள் பள்ளியின் இன்னொரு அடையாளம் ஜீவித்குமார். இனி வரும் காலங்களில், ஏழை, பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி, 'நீட்' தேர்வை, அரசு பள்ளி மாணவர்கள் சர்வ சாதாரணமாக எதிர்கொள்வர். மாணவர் ஜீவித்குமாரை பாராட்டி தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் குறித்த புத்தகத்தை பரிசாக வழங்கி வாழ்த்தினார். கலெக்டர் கூறுகையில், ‛‛ஜீவித்குமாரின் மருத்துவ படிப்புக்கு தேவையான உதவியை, அரசு சார்பில் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


‌ இதய மருத்துவராக லட்சியம் : ஸ்ரீஜன் ‌


காங்கேயம்: 'நீட் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவர், இதய மருத்துவராவதே லட்சியம்' என்றார்.நீட் தேர்வு முடிவு, நேற்று முன்தினம் வெளியானது. இதில், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலைச் சேர்ந்த மாணவன் ஸ்ரீஜன், 710 மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் முதலிடம், இந்திய அளவில் எட்டாவது இடத்தைப் பிடித்தார்.


ஸ்ரீஜன் கூறியதாவது:


வெள்ளக்கோவிலில் தனியார் பள்ளியில், ஒன்றாம், இரண்டாம் வகுப்பு படித்தேன். மூன்றாம் வகுப்பு முதல், பிளஸ் ௨ வரை, ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் சி.பி.எஸ்.இ., படித்தேன். கடந்த, 201௮ ~ ௧௯ல் நடந்த நீட் தேர்வில், 385 மதிப்பெண் பெற்றேன். 


ஒரே நேரத்தில் பிளஸ் 2 தேர்வுக்கும், நீட் தேர்வுக்கும் படித்ததால், மதிப்பெண் குறைந்தது. இதனால், நாமக்கல்லில் கிரீன்பார்க் பயிற்சி மையத்தில் சேர்ந்தேன்.


 கொரோனா தொற்றால், 'ஆன்லைன்' மூலம் வகுப்பு நடந்தது. தினமும் காலை, 5:00 மணிக்கு படிப்பேன். ஒரு நாளைக்கு சராசரியா, 10 மணி நேரம் படித்தேன். புதுச்சேரி, ஜிப்மர் கல்லுாரியில் மருத்துவம் படிக்க வேண்டும். இதய மருத்துவராவதே என் லட்சியம். இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. 😀😀😀😀😀😀😀 அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் தனியார் நீட் ேச்சிங் படிக்க வாய்ப்பு கிடைக்குமா ?

    ReplyDelete