அண்ணா பல்கலை.க்கு அதிகாரம்:ஐகோர்ட் உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 20, 2020

அண்ணா பல்கலை.க்கு அதிகாரம்:ஐகோர்ட் உத்தரவு

 அண்ணா பல்கலை.க்கு அதிகாரம்:ஐகோர்ட் உத்தரவு


பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், நிறுத்தி வைக்கவும், அண்ணா பல்கலைக்கு அதிகாரம் உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


செங்கல்பட்டு மாவட்டம், சட்டமங்கலத்தில், ஏ.ஆர்.எஸ்., பொறியியல் கல்லூரி, ஏ.ஆர்.எம்., பொறியியல் கல்லூரி உள்ளன.


போதிய ஆசிரியர்கள் இல்லாததால், இந்த கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட, 'அபிலியேஷன்' எனப்படும் இணைப்பை, அண்ணா பல்கலை நிறுத்தி வைத்து, 2019 நவம்பரில் உத்தரவு பிறப்பித்தது.


இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், இரண்டு கல்லூரிகளும் மனுக்கள் தாக்கல் செய்தன.வழக்கு நிலுவையில் இருக்கும் போது, இரண்டு கல்லூரிகளும், 2020 ~~ 21ம் ஆண்டுக்கு, மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டது. 


இதை எதிர்த்தும், கல்லூரிகள் வழக்கு தொடுத்தன.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அண்ணா பல்கலை மற்றும் ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவுகளை ரத்து செய்தது. இதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில், அண்ணா பல்கலை மேல்முறையீடு செய்தது.



மனுக்கள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தன.


அண்ணா பல்கலை சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத், சிறப்பு பிளீடர் எல்.பி.சண்முகசுந்தரம், ஏ.ஐ.சி.டி.இ., சார்பில், மத்திய அரசு வழக்கறிஞர் ரபுமனோகர், உயர் கல்வித்துறை சார்பில், சிறப்பு பிளீடர் மனோகரன் ஆஜராகினர்.


மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், நிறுத்தி வைக்கவும், பல்கலைக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.



இணைப்புக்கான நிபந்தனைகளை கல்லூரிகள் பின்பற்ற தவறினால், தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்.நிறுத்தி வைப்பதற்கு அதிகாரம் இருப்பது போல், வாபஸ் பெறவும் உள்ளது.


கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள், வசதிகள் உள்ளன என்பதில், பல்கலை திருப்தி அடைந்தால், வாபஸ் பெறலாம். 15 நாட்களுக்குள், இரண்டு கல்லூரிகளையும் நேரில் ஆய்வு செய்ய, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு உத்தரவிடப்படுகிறது.



பின், கல்லூரிகளுக்கும், பல்கலைக்கும் சந்தர்ப்பம் வழங்கி, இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.எனவே, அண்ணா பல்கலையின் உத்தரவுகளை ரத்து செய்த, தனி நீதிபதியின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.


 அதேநேரத்தில், இணைப்பை நிறுத்தி வைத்த பல்கலையின் உத்தரவு, ஏ.ஐ.சி.டி.இ.,யின் இறுதி உத்தரவைப் பொறுத்து அமையும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment