மாணவர்கள் சான்றிதழ்களைப் பெற இனி ஆவணங்கள் தேவையில்லை
மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களைப் பெற இனி ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை. இதற்காக முக அடையாள முறையை சிபிஎஸ்இ அறிமுகம் செய்துள்ளது.
டிஜிட்டல் ஆவணங்களைக் கையாளும் வகையில் பர்னியாம் மஞ்சுஷா மற்றும் டிஜிலாக்கர் ஆகிய செயலிகளை சிபிஎஸ்இ தனது மாணவர்களுக்காகப் பயன்படுத்தி வருகிறது. இதில் மாணவர்களின் 10, 12-ம் வகுப்புச் சான்றிதழ்கள், மதிப்பெண் அட்டைகள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.
வழக்கமாக மாணவர்கள் ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கொடுத்தால் மட்டுமே சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்ய முடியும்.
தற்போது ஆவணங்கள் இல்லாமலேயே சான்றிதழ்களைப் பெற முக அடையாள முறையை சிபிஎஸ்இ அறிமுகம் செய்துள்ளது.
இதில் மாணவர்களின் நேரடியான முகம், ஏற்கெனவே சிபிஎஸ்இ ஹால் டிக்கெட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் புகைப்படத்துடன் ஒப்பீடு செய்யப்படும். இரண்டும் ஒரே மாதிரி இருக்கும்பட்சத்தில் ஆவணங்கள், மாணவர்களின் இ-மெயிலுக்கு அனுப்பப்படும்.
இதன் மூலம் வெளிநாட்டு மாணவர்களும் டிஜிலாக்கரைத் திறக்க முடியாமல் சிரமப்படும் மாணவர்களும் பெரிதும் பயன்பெறுவர் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
10, 12-ம் வகுப்புச் சான்றிதழ்கள், மதிப்பெண் அட்டைகள், இடம்பெயர்வுச் சான்றிதழ்கள் என 12 கோடிக்கும் அதிகமான டிஜிட்டல் ஆவணங்களை டிஜிலாக்கர் செயலியில் சிபிஎஸ்இ பதிவேற்றம் செய்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment