மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடப்பாண்டில் உள் ஒதுக்கீடு வழங்க வாய்ப்புள்ளதா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, October 14, 2020

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடப்பாண்டில் உள் ஒதுக்கீடு வழங்க வாய்ப்புள்ளதா?

 மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடப்பாண்டில் உள் ஒதுக்கீடு வழங்க வாய்ப்புள்ளதா?


தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டம் நடப்பு கல்வியாண்டில் அமலாக வாய்ப்புள்ளதா? என்பது தொடர்பாக ஆளுனரின் செயலரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும் நீட் தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர் முத்துக்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:


மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அவசர சட்டம் நிறைவேற்றியுள்ளது.


இந்தச் சட்டம் ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுனர் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. 


எனவே, அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்தவும், அவசர சட்டத்துக்கு ஆளுனர் ஒப்புதல் வழங்கவும் உத்தரவிட வேண்டும்


இவ்வாறு மனுக்களில் கூறியிருந்தனர்.


இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் நீட் தேர்வு எழுதியுள்ளனர்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


மனுதாரர் வழக்கறிஞர் பிரசன்னா வாதிடுகையில், நீதிபதி கலையரசன் குழு அறிக்கையில் கடந்தாண்டு நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்கள் 1,56,249 பேரில் 6 பேர் மட்டுமே நீ்ட்தேர்வில் வெற்றிப்பெற்றதாக கூறப்பட்டுள்ளது


நீட் தேர்வு அமல் செய்யப்படுவதற்கு முன்பு ஒரு சதவீத அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்த நிலையில், நீட் தேர்வு அமலானதற்கு பிறகு அந்த எண்ணிக்கை 0.1 சதவீதமாக குறைந்துவிட்டது. 2018-19ல் 5, 2019- 2020ல் 6 என கடந்த இரு கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 11 பேருக்கு மட்டுமே மருத்துவ சீட் கிடைத்துள்ளது என்றார்.


பின்னர் நீதிபதிகள், தமிழகத்தில் பல விஷயங்களில் முரண்பட்டிருக்கும் அரசியல் கட்சிகள் நீட் தேர்வில் ஒன்றாக உள்ளனர். நாளை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகவாய்ப்புள்ளது.


 இதனால் இதில் உடனடியாக முடிவெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆளுனரின் செயலர் பதிலளிக்க வேண்டும் என்றனர்.


அரசு தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில், தமிழக அரசின் அவசர சட்டம் ஆளுனரின் பரிசீலனையில் உள்ளது. முடிவெடுக்க 2 வார அவகாசம் வேண்டும் என்றார்.


தொடர்ந்து நீதிபதிகள், அவசர சட்டம் செப். 15ல் நிறைவேற்றப்பட்டு அன்றே ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 


ஒரு மாதம் ஆகியும் முடிவெடுக்கப்படவில்லை. மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு விரைவில் முடிவெடுக்க வேண்டும். 2 நாளில் நீட் தேர்வு முடிவு வெளியாக உள்ள நிலையில் அவசர சட்டத்துக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படாதது அரசு பள்ளி மாணவர்களை பாதிக்காதா?


மொத்த மாணவர்களில் 41 சதவீதம் பேர் அரசுப் பள்ளி மாணவர்கள். ஆனால் ஒற்றை இலக்கத்தில் தான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்கின்றன. இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வாய்ப்புள்ளதா? என்றனர்.


அதற்கு அரசு வழக்கறிஞர், நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், பல நடைமுறைகள் உள்ளன என்றார்


பின்னர், விசாரணையை அக். 16-க்கு ஒத்திவைத்து, அன்று ஆளுநரின் செயலரிடம் உரிய விளக்கம் பெற்று நீதிமன்றத்துக்கு தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment