மாணவிக்குக் கொரோனா; தொடர்பில் இருந்த மாணவிகளைப் பள்ளிக்கு வந்து அழைத்துச் சென்ற சுகாதாரத்துறை: பள்ளியை மூடக்கோரிய MLA - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, October 17, 2020

மாணவிக்குக் கொரோனா; தொடர்பில் இருந்த மாணவிகளைப் பள்ளிக்கு வந்து அழைத்துச் சென்ற சுகாதாரத்துறை: பள்ளியை மூடக்கோரிய MLA

 மாணவிக்குக் கொரோனா; தொடர்பில் இருந்த மாணவிகளைப் பள்ளிக்கு வந்து அழைத்துச் சென்ற சுகாதாரத்துறை: பள்ளியை மூடக்கோரிய MLA


புதுச்சேரி அருகே அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 6 மாணவிகளைப் பரிசோதனைக்காக பள்ளிக்கு வந்து ஆம்புலன்ஸ் மூலம் சுகாதாரத் துறையினர் அழைத்துச் சென்றனர். பள்ளியை மூட வேண்டும் என, என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.


புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் அடுத்த வாதானுாரில் சாரதாதேவி அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பள்ளியில் மாணவி வந்து சென்ற வகுப்பறை பூட்டப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.


இந்நிலையில், பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (அக். 17) மீண்டும் வகுப்புகள் நடத்தப்பட்டன. கரோனா காரணமாக வகுப்பறை மூடப்பட்டதால், மாணவர்கள் பள்ளியின் மைதானத்தில் உள்ள மரத்தடியில் அமரவைக்கப்பட்டனர். இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 6 மாணவிகளைக் கரோனா பரிசோதனைக்காக சுகாதாரத் துறையினர் பள்ளிக்கு வந்து ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர்.


இதனால், பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவியர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்த தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ டிபிஆர் செல்வம் நேரடியாகப் பள்ளிக்கு வந்தார். அங்கு கரோனா பாதிக்கப்பட்ட மறுநாளே பள்ளிகளைத் திறக்க வேண்டுமா? விடுமுறை அளித்தால் என்ன? என்று கேள்வி எழுப்பியதோடு பள்ளி முதல்வர், ஆசிரியர்களைக் கடிந்துகொண்டார். உடனடியாக பள்ளியை மூடி மாணவர்களை வீட்டுக்கு அனுப்பும்படி வலியுறுத்தினார்.


தொடர்ந்து கல்வித் துறையின் முதன்மைக் கல்வி அலுவலரை செல்போன் மூலம் தொடர்புகொண்டு, உடனடியாக பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனவும், இல்லையெனில் நாங்களே மாணவர்களைப் பள்ளியில் இருந்து வெளியேற்றுவோம் எனவும் தெரிவித்தார். இதையடுத்து, இயக்குநர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தலின்பேரில் மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்


இதுகுறித்து, எம்எல்ஏ டிபிஆர் செல்வம் கூறும்போது, "10-ம் வகுப்பு மாணவிக்குக் கரோனா வந்தவுடன் பள்ளிக்கு விடுமுறை அளித்திருக்க வேண்டும். ஆனால், பள்ளியைத் திறந்து மாணவர்களுக்குப் பரிசோதனை நடத்துகின்றனர். ஏற்கெனவே எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார்.


கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த பல மாணவர்களும் இங்கு படித்து வருகின்றனர். மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு?


இதுவரை கரேனாவால் இறந்தவர்களுக்கு அரசு அறிவித்தபடி நிவாரண உதவி வழங்கவில்லை. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான இழப்பை முதல்வர், அமைச்சர் சரிசெய்வார்களா? மாணவர்களுக்கு மன அழுத்தத்தை அரசு ஏற்படுத்துகிறது.


புதுச்சேரி கல்வித்துறை, தமிழக அரசின் கல்வி முறையைப் பின்பற்றி வரும் நிலையில், புதுச்சேரியில் பள்ளிகளைத் திறக்க அவசரம் காட்டியது ஏன்? எனத் தெரியவில்லை. எனவே பள்ளிகள் திறப்பு குறித்து அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.


தொடர்ந்து பள்ளிகள் இயங்கினால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலன் கருதி தொகுதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் முன்பு விடுமுறை அளிக்க வலியுறுத்தி பொதுமக்களைத் திரட்டி, போராட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்

No comments:

Post a Comment