நீட் பயிற்சி வகுப்பு எப்போது?- 30 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் கவலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, November 7, 2020

நீட் பயிற்சி வகுப்பு எப்போது?- 30 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் கவலை

 நீட் பயிற்சி வகுப்பு எப்போது?- 30 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் கவலை


நீட் பயிற்சி வகுப்பு எப்போது தொடக்கப்படும் என்பதை அறியாமல் சுமார் 30 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ உட்பட உயர்கல்விக்கான போட்டித் தேர்வுகளுக்கு 2017-ம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வித் துறை சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் வட்டாரத்துக்கு ஒன்று வீதம் 412 மையங்களில், இ-பாக்ஸ் என்ற தனியார் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சியை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இதில் நீட் தேர்வுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது


412 நீட் பயிற்சி மையங்களை உருவாக்கவும், கட்டமைப்பு வசதி செய்யவும் கடந்த இரு ஆண்டுகளில் ரூ.57 லட்சம் செலவு செய்யப்பட்டது. நீட் தேர்வுக்காக 412 மையங்களில் 6 ஆயிரத்து 618 மாணவர்களுக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.


இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், ’’2020 நவம்பர் 1-ம் தேதி முதல் முதல் 2021-ம் ஆண்டுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் இதில் இலவசமாகக் கலந்துகொள்ளலாம். நீட் பயிற்சியில் அதிக அளவிலான மாணவர்கள் கலந்துகொள்ளும் வகையில், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.


நீட் இலவசப் பயிற்சி ஓரிரு நாட்களில் தொடங்கும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் அக்.31-ம் தேதி தெரிவித்திருந்தார்.


இதனால் அரசுப்பள்ளி மாணவர்கள் நவம்பர் 1-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், இதுவரை பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவில்லை. இதனால் வகுப்புகள் எப்போது தொடங்கும் என்று தெரியாமல், பயிற்சி வகுப்புக்குப் பதிவு செய்த சுமார் 30 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் பெரிதும் கவலையில் உள்ளனர்.


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முழுமையாகப் பயிற்சி வழங்கும் வகையில், அவர்களுக்கு விரைவிலேயே பயிற்சியைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment