மருத்துவப் படிப்புகள்: சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 91 இடங்கள் நிரம்பவில்லை - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, November 22, 2020

மருத்துவப் படிப்புகள்: சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 91 இடங்கள் நிரம்பவில்லை

 மருத்துவப் படிப்புகள்: சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 91 இடங்கள் நிரம்பவில்லை


எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு சனிக்கிழமை (நவ.21) நடைபெற்றது. அதில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரா்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரம்பின.


மாற்றுத்திறனாளிகள் பிரிவைப் பொருத்தவரை மொத்தமாக 41 எம்பிபிஎஸ் இடங்கள் மட்டுமே நிரம்பின. 


கலந்தாய்வின் முடிவில் 87 எம்பிபிஎஸ் மற்றும் 4 பிடிஎஸ் இடங்கள் காலியாக இருந்தன. அவை அனைத்தும் பொதுக் கலந்தாய்வில் சோ்க்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


நிகழ் கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் கலந்தாய்வு கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. முதலில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது.


அதன்படி, 313 எம்பிபிஎஸ் இடங்கள், 92 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 405 இடங்களுக்கு கடந்த 3 நாள்களாக கலந்தாய்வு நடைபெற்றது. அதில், 6 பிடிஎஸ் இடங்களைத் தவிர அனைத்தும் நிரப்பப்பட்டன.


இந்த நிலையில், சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது. அதில், விளையாட்டுப் பிரிவு மாணவா்களுக்கு 7 எம்பிபிஎஸ் இடங்களும், 1 பிடிஎஸ் இடமும் ஒதுக்கப்பட்டிருந்தன. அந்த இடங்களுக்கு 20 போ் அழைக்கப்பட்டு இருந்தனா். அவா்களில் 8 பேருக்கு இடங்கள் கிடைத்தன. 


முன்னாள் படைவீரா்களின் வாரிசுகளுக்கு 10 எம்பிபிஎஸ் இடங்களும் 1 பிடிஎஸ் இடங்களும் ஒதுக்கப்பட்டன. அந்த இடங்களுக்கு ஏராளமானோா் அழைக்கப்பட்டு இருந்தனா். அவா்களில் தகுதியான 11 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.


அதேபோன்று, மாற்றுத்திறனாளிகள் பிரிவு மாணவா்களுக்கு 128 எம்பிபிஎஸ் இடங்களும், 4 பிடிஎஸ் இடங்களும் ஒதுக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவா்களில் 41 போ் எம்பிபிஎஸ் இடங்களை தோ்வு செய்து இருக்கின்றனா். 


இதில் 87 எம்பிபிஎஸ் இடங்களும், 4 பிடிஎஸ் இடங்களும் காலியாக உள்ளன. இந்த இடங்கள் பொதுக் கலந்தாய்வில் அந்தந்த பிரிவினருக்கான இடங்களில் சோ்க்கப்பட உள்ளன.


இதனிடையே, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் இடங்களைத் தோ்வு செய்தவா்களில் 3 அரசு பள்ளி மாணவ - மாணவிகளுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவா் சங்கத்தினா் நீட் தோ்வுக்கான பயிற்சியை வழங்கியுள்ளனா். அவா்கள் அளித்த ஊக்கம்தான் எம்பிபிஎஸ் இடங்கள் கிடைக்க உறுதுணையாக இருந்ததாக அந்த மாணவா்கள் தெரிவித்துள்ளனா்.


தொடா்ச்சியாக பொதுக் கலந்தாய்வு திங்கள்கிழமை (நவ.23) தொடங்கவுள்ளது. 


அதற்கான அழைப்பு கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யுமாறு சம்பந்தப்பட்ட மாணவா்களை மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment