அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு சுழல் நிதி! - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, November 21, 2020

அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு சுழல் நிதி!

 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு சுழல் நிதி!


அரசு பள்ளி மாணவர்களின், மருத்துவ படிப்பு செலவை, அரசு ஏற்பதாகவும், அதற்காக, தமிழக மருத்துவ சேவை கழகத்தில், சுழல் நிதி ஏற்படுத்தவும், முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார். 


இதன் வாயிலாக, அம்மாணவர்கள், கல்வி உதவித்தொகை கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்று, அவர் தெரிவித்துள்ளர். அதேபோல, ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு செலவுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலினும் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.மருத்துவ படிப்பில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வு அமலுக்கு வந்ததில் இருந்து, தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால், மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலைமை ஏற்பட்டது. கடந்த கல்வியாண்டில், அரசு பள்ளிகளில் படித்த, ஆறு மாணவர்கள் மட்டுமே, மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். 


‌ எட்டாக்கனி ‌


தமிழகத்தில், மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில், 41 சதவீதம் பேர், அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். அவர்களுக்கு, மருத்துவ படிப்பு என்பது எட்டாக்கனியாக மாறியது.


அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவவை நனவாக்கும் வகையில், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, தமிழக அரசு இயற்றி, இந்தாண்டு முதல் நடைமுறைப்படுத்தியது. அதன்படி, அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள், 313 எம்.பி.பி.எஸ்., இடங்களிலும், 92 பி.டி.எஸ்., பல் மருத்துவ படிப்பு இடங்களையும் பெற்றுள்ளனர். இதற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் முடிந்துள்ள நிலையில், சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள, அரசு பள்ளி மாணவர்களால், ஆண்டுக்கு, 3 ~ 4 லட்சம் ரூபாய் வரையிலான கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், மருத்துவ படிப்பை கைவிடும் நிலைக்கு, ஏழை மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.


அதனால், 'அரசு பள்ளி மாணவரின், மருத்துவ கல்வி கட்டணத்தை, அரசே ஏற்க வேண்டும்' என, உயர் நீதிமன்றமும் அறிவுறுத்தியது.இதையடுத்து, அரசு பள்ளி மாணவர்களின், மருத்துவ படிப்பு செலவை ஏற்பதற்காகவே, தமிழக மருத்துவ சேவை கழகத்தில் சுழல் நிதி ஏற்படுத்த, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார். 


இது தொடர்பாக, முதல்வர் இ.பி.எஸ்., அறிக்கை:


அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில், 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, அரசு இயற்றியுள்ளது. அதன்படி, நடப்பாண்டில், 313 எம்.பி.பி.எஸ்., 'சீட்'களும், 92 பல் மருத்துவ இடங்களும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 


‌ பொருளாதார நிதி ‌


அரசு பள்ளி மாணவர்களின் ஏழ்மை மற்றும் பொருளாதார சூழ்நிலை கருதி, 'போஸ்ட் மெட்ரிக்' கல்வி உதவித்தொகை மற்றும் இதர கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என, 18ம் தேதி அறிவித்தேன்.கவுன்சிலிங்கில், தனியார் மருத்துவ கல்லுாரிகளில் இடம் கிடைத்துள்ள மாணவர்கள், கல்வி கட்டணத்தை செலுத்துவதில் உள்ள சிரமத்தை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, இதை அறிவித்தேன்.


இதை செயல்படுத்தும் வகையில், அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை, உதவித்தொகை வரும் வரை காத்திருக்காமல், உடனடியாக செலுத்தும் வகையில், தமிழக மருத்துவ சேவை கழகத்தில், சுழல் நிதி உருவாக்க உத்தரவிட்டுள்ளேன்.


‌ அரசியல் நாடகம் ‌


இந்த நிதியில் இருந்து, மாணவர்களுக்கு கல்வி, விடுதி கட்டணங்களை, அரசே, கல்லுாரி நிர்வாகங்களுக்கு செலுத்தும். அரசு பள்ளி மாணவர்களுக்கு, அரசின் உதவி முழுமையாக கிடைக்கும் என தெரிந்த பின்பும், தி.மு.க., உதவுவதாக கூறியிருப்பது, அரசியல் நாடகம் என்பதை, மக்கள் நன்கு அறிவர்.இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.


அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில், ஆளும் அ.தி.மு.க., அரசு, பொது மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளது. தொடர்ந்து, கல்வி கட்டணத்தையும், அரசு ஏற்கும் என, அறிவித்துள்ள நிலையில், வரும் சட்டசபை தேர்தலில், இது ஆளும் கட்சிக்கு சாதகமாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


இதையடுத்து, தி.மு.க.,வும், தற்போது, அரசு பள்ளி மாணவர்களின் கல்வி செலவுக்கு உதவுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


‌ கனவு நிறைவேறும் ‌


தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கை:தமிழகத்தில், வரும் சட்டசபை தேர்தலுக்கு பின் அமையவிருக்கிற, தி.மு.க., ஆட்சியில், 'நீட்' தேர்வை, முழுமையாக ரத்து செய்வதற்குரிய சட்ட நடவடிக்கைகள் உறுதியாக மேற்கொள்ளப்படும்.


இந்த கல்வியாண்டில், சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் இடம் பெற்றுள்ள, அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்புக்குரிய கட்டணத்தை முழுமையாக ஏற்போம்.அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, கிராமப்புற ஏழை பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த, அனைத்து மாணவர்களின் மருத்துவ கனவும் நிச்சயமாக நிறைவேறும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment