10 ஆண்டுகள் மாணவர் தேர்ச்சி விபரம் சேகரிப்பு: சப் கலெக்டர் அதிரடியால் பரபரப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, January 31, 2021

10 ஆண்டுகள் மாணவர் தேர்ச்சி விபரம் சேகரிப்பு: சப் கலெக்டர் அதிரடியால் பரபரப்பு

 10 ஆண்டுகள் மாணவர் தேர்ச்சி விபரம் சேகரிப்பு:  சப் கலெக்டர் அதிரடியால் பரபரப்பு


விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சப் கலெக்டர் ஆய்வுக்குப் பின் 10 ஆண்டுகள் மாணவர் தேர்ச்சி விபரம் சேகரிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சில ஆண்டுகளாக மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை குறைந்ததுடன், தேர்ச்சி சதவீதமும் சரிந்தது. 


நடப்பு கல்வியாண்டில் 6 முதல் பிளஸ் 2 வரை 764 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.கடந்த கல்வியாண்டுகளைக் காட்டிலும், மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.


மேலும், வகுப்பறைகள், செய்முறைத் தேர்வுக்கான ஆய்வகங்களில் உபகரணங்கள், தளவாடங்கள் திருட்டு மற்றும் என்.எல்.சி., சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நவீன கழிவறைகளில் மர்ம நபர்களால் உபகரணங்கள் சூறையாடப்பட்டது போன்றவைகள் அதிகரித்தன.தற்போது கொரோனா காரணமாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடக்கிறது.


இந்நிலையில், சப் கலெக்டர் பிரவீன்குமார், சமீபத்தில் பள்ளியில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, மாணவர்கள், ஆசிரியர்கள் குறித்த விபரம் கேட்டறிந்த அவர், மாணவர் சேர்க்கை, தேர்ச்சி விகிதம் ஆகியவற்றை கேட்டறிந்து சென்றார்.


அதன் பின், சி.இ.ஓ., உத்தரவின் பேரில், கடந்த 10 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை, தேர்ச்சி சதவீதம் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டு, விருத்தாசலம் டி.இ.ஓ.,விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சப் கலெக்டர் ஆய்வுக்குப் பின், மாணவர்கள் விபரம் சேகரிக்கப்பட்டது, ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'சப் கலெக்டர் திடீர் ஆய்வின்போது, மாணவர் சேர்க்கை, தேர்ச்சி சதவீதம் கேட்டு அதிருப்தியடைந்ததாக தெரிகிறது. அதன்பின், சி.இ.ஓ., உத்தரவின்படி, கடந்த 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை, மாணவர் சேர்க்கை, தேர்ச்சி சதவீதம் குறித்த விபரம் டி.இ.ஓ.,வசம் அவசர அவசரமாக ஒப்படைக்கப்பட்டது.


தனியார் பள்ளிக்கு நிகராக ஷூ, பேக் உட்பட 14 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கினாலும், சேர்க்கை, தேர்ச்சி சதவீதம் குறைவது அதிகரித்து வருகிறது. இதன் மூலம் பல ஆண்டுகளாக இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கிடைக்கும் என தெரிகிறது' என்றார்

No comments:

Post a Comment