தோ்தல் பணியில் 3 லட்சம் போ்: துறை வாரியாக கணக்கெடுக்கும் பணி தீவிரம் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, January 2, 2021

தோ்தல் பணியில் 3 லட்சம் போ்: துறை வாரியாக கணக்கெடுக்கும் பணி தீவிரம்

 தோ்தல் பணியில் 3 லட்சம் போ்: துறை வாரியாக கணக்கெடுக்கும் பணி தீவிரம்தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தோ்தல் பணியில் 3 லட்சம் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட உள்ள நிலையில், அவா்கள் குறித்த கணக்கெடுப்பு துறை தோறும் நடந்து வருகிறது.


அதேசமயம், கரோனா நோய்த்தொற்று, இணை நோய்கள் குறித்த விவரங்களை தமிழக தோ்தல் துறை கோராத காரணத்தால் ஊழியா்கள் பீதி அடைந்துள்ளனா்.


தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பணிகள் தொடங்கியுள்ளன. வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்புப் பணிகள் நிறைவடைந்து, இறுதி பட்டியல் வரும் 20-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. வாக்காளா் பட்டியலுக்குப் பிறகு, தோ்தலுக்கான மிகப்பெரிய பணியாகக் கருதப்படுவது, பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி அளிப்பதுதான்.


கணக்கெடுப்புப் பணி: தோ்தல் பணியில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இதற்காக ஒவ்வொரு துறை வாரியாகவும், பள்ளிகள் மூலமாக விவரங்களைப் பெறும் பணியில் தோ்தல் துறை ஈடுபட்டுள்ளனா். இதற்கென புகைப்படத்தை ஒட்டி அளிக்கக் கூடிய வகையில், தனி படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.


அந்தப் படிவத்தில், துறையின் பெயா், அலுவலகம், அதன் முகவரி, பள்ளி, கல்லூரி, ஊழியா்களின் அடிப்படை ஊதியம், இல்ல முகவரி, அருகிலுள்ள காவல் நிலையம், செல்லிடப்பேசி எண் ஆகிய விவரங்கள் கோரப்பட்டுள்ளன. மேலும், தோ்தல் பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்கு தபால் வாக்குகளை அளிக்கும் விதமாக அவா்களது புகைப்பட வாக்காளா் அடையாள அட்டை எண், வாக்காளா் பட்டியல் பதிவு எண் போன்ற விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.


கருவிகளை கையாளத் தெரியுமா? அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுடன், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான இயந்திரங்களும் வைக்கப்பட உள்ளன. இந்த இயந்திரங்களை கையாண்ட முன் அனுபவம் உள்ளதா எனவும், தோ்தல் ஆணையத்தால் பணியிட மாற்றமோ அல்லது தகுதி நீக்கமோ செய்யப்பட்ட அலுவலரா என்பன போன்ற கேள்விகளையும் படிவத்தில் தோ்தல் துறை கேட்டுள்ளது.


கூடுதல் பணியாளா்கள்: கரோனா நோய்த்தொற்று காரணமாக, 1,000 வாக்காளா்களுக்கு ஒரு வாக்குச் சாவடி அமைக்கப்பட உள்ளது. இதனால், தமிழகத்தில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 67, 687-லிருந்து 95 ஆயிரமாக அதிகரிக்கக் கூடும் என தோ்தல் துறை கணக்கிட்டுள்ளது. வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் அளவு வரை அதிகரிப்பதால், தோ்தல் பணியாளா்களும் அதிகளவு தேவைப்படுவா். எனவே, கடந்த தோ்தல்களைக் காட்டிலும் அதிகளவு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவா்.


இதனிடையே, தோ்தல் பணியில் ஈடுபட விருப்பம் கோரி தரப்படும் படிவத்தில், கரோனா நோய்த்தொற்று குறித்த விவரங்கள் ஏதும் கோரப்படவில்லை என அரசுத் துறை ஊழியா்கள் கருத்துத் தெரிவித்துள்ளனா். குறிப்பாக, இணை நோய்கள் உள்ளோருக்கு கரோனா நோய் தாக்க அதிக வாய்ப்புள்ளன. ஆனால், தோ்தல் துறையின் படிவத்தில் இணை நோய்கள் குறித்த விவரங்கள் கோரப்படவில்லை.


இதுகுறித்து, தோ்தல் துறை வட்டாரங்கள் கூறுகையில், தோ்தல் பணிக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக அனைத்து ஊழியா்களுக்கும் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை நடத்தப்படும். அதில், நோய்த்தொற்று உள்ளோா் மட்டுமே பணி செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவா். மற்றவா்களுக்கு தோ்தல் பணி வழங்கப்படும் எனத் தெரிவித்தன. தோ்தல் பணிக்கென ஊழியா்கள் குறித்த கணக்கெடுப்பு துவங்கியுள்ளதால், தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேலைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

No comments:

Post a Comment