கொரோனா காலத்தில் 4 மொழி கற்ற மாணவி
கொரோனா விடுமுறை காலத்தை பயன்படுத்தி, 10ம் வகுப்பு மாணவி, நான்கு மொழிகளை பேச, எழுத, படிக்க கற்று, சாதனை படைத்துள்ளார்.
புதுக்கோட்டை, பொன்னமராவதி அருகே, நகரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேதுராமன், 48, மகேஸ்வரி, 43, தம்பதிக்கு நான்கு மகள்கள். சேதுராமன் வெளிநாட்டில் பணிபுரிகிறார்.
இரண்டாவது மகள் சுபபாரதி, 15, அதே பகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் அரசு உதவி பெறும் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வமாக உள்ள சுபபாரதி, பல்வேறு போட்டிகளில், பரிசுகள் பெற்றுள்ளார். கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் திறக்காத நிலையில், ஒன்பது மாதமாக, சுபபாரதி வீட்டில் இருந்துள்ளார்.
ஆயினும், தனக்கு விருப்பமான ஓவியத்தை இணையதளத்தில் பார்த்து, எளிதில் யாரும் வரைய முடியாத, '3 டி பெயின்டிங், டிராயிங், ரிவர்ஸ் டிராயிங்' உள்ளிட்டவற்றை தத்ரூபமாக வரைந்து சாதித்து காட்டியுள்ளார்.
அதோடு, தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்கு எழுதவும், படிக்கவும் தெரிந்திருந்த சுபபாரதி, தாயார் உதவியுடன் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளை குறைந்த நாட்களில் எழுதவும், படிக்கவும், பேசவும் கற்றுள்ளார்.
தற்போது, ஆறு மொழிகளையும் சரளமாக பேசி, அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறார்.'
எதிர்காலத்தில் நாடு முழுதும் நடக்கும் ஓவியப் போட்டிகளில் பங்கேற்க, அவருக்கு அரசு ஊக்கமும், உதவியும் அளிக்க வேண்டும்' என, சுபபாரதி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment