தொலைதூர டிப்ளமோ முறையில் பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை கற்பிக்கக் கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ எச்சரிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Friday, January 29, 2021

தொலைதூர டிப்ளமோ முறையில் பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை கற்பிக்கக் கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ எச்சரிக்கை

 தொலைதூர டிப்ளமோ முறையில் பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை கற்பிக்கக் கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ எச்சரிக்கை


தொலைதூர டிப்ளமோ முறையில் பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை கற்பிக்கக் கூடாது என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) எச்சரித்துள்ளது.


இது தொடர்பாக ஏஐசிடிஇ வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:


4 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்


தொலைதூர டிப்ளமோ முறையில் பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட படிப்புகள் கற்பிக்கப்படுகிறதா என்பது குறித்து விளக்கம் அளிக்க ஏஐசிடிஇ-க்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 


மேலும், ராஜஸ்தான் மாநிலத்தில் இயங்கும் ஜேஆர்என் ராஜஸ்தான் வித்யாபெத், மேம்பட்ட ஆய்வுகள் கல்வி நிறுவனம், அலகாபாத் வேளாண்மை நிறுவனம் மற்றும் தமிழகத்தில் விநாயகா மிஷன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகிய 4 நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர அடிப்படையில் டிப்ளமோ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி வழங்கப்படுகிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இளநிலை மற்றும் முதுநிலை முறையில்படிக்கவேண்டிய பொறியியல், தொழில்நுட்பம், வேளாண்மை, கட்டிடக்கலை, நகர திட்டமிடல், ஓட்டல் மேலாண்மை, கேட்டரிங் தொழில்நுட்பம், மருந்தக படிப்புகள், பயன்பாட்டு கலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் ஆகியவை தொலைதூர டிப்ளமோ முறைகளில் பயிலுவதற்கு ஏஐசிடிஇ அனுமதிவழங்கவில்லை. மேற்கண்ட படிப்புகளில் தொலைதூர டிப்ளமோ முறையில் எந்தகல்வி நிறுவனங்களும் மாணவர் சேர்க்கையில் ஈடுபடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


எனவே, ஏஐசிடிஇ-யின் அனுமதி பெறாமல் தொலைதூர டிப்ளமோ அடிப்படையில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை கற்பிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment