பள்ளி பாடத்திட்டம் குறைப்பு :குழப்பத்தில் ஆசிரியர்கள் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, January 22, 2021

பள்ளி பாடத்திட்டம் குறைப்பு :குழப்பத்தில் ஆசிரியர்கள்

 பள்ளி பாடத்திட்டம் குறைப்பு :குழப்பத்தில் ஆசிரியர்கள்


பள்ளி பாடத்திட்டம் குறைப்பு குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் அதிகாரிகளிடம் இருந்து கிடைக்காத காரணத்தினால் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். 


தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு மாணவர்களுக்கான வகுப்புகள் கடந்த 19-ம் தேதி திறக்கப்பட்டது. அதன்படி, கோவை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 632 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.


 கடந்த 2 நாட்களாக மாணவர்களுக்கு கொரோனா தொடர்பான விழிப்புணர்வு உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முதல் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது.


இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் குறைப்பட்டுள்ளது. 


இந்த குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாடவாரியாக நீக்கப்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுள்ளது. இருப்பினும், பாடத்திட்டங்கள் நீக்கம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவல்களும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படவில்லை எனவும், வாய்மொழி உத்தரவாகவும், வாட்ஸ் அப் மூலமாகவும்தான் குறைக்கப்பட்ட பாட விவரங்கள் தெரியவந்துள்ளது எனவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.


தவிர, பாடத்திட்டம் குறைப்பு என்ற பெயரில் பாடங்களில் உள்ள சில பிரிவுகளை குறைத்துள்ளனர். அதாவது, பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்களுக்கு எடுத்துரைக்கவே மூன்று நாட்களுக்கு மேல் தேவைப்படும்போல் உள்ளது என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


 மேலும், நீக்கப்பட்ட பாடத்திட்டங்கள் எவை என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத காரணத்தினால் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.


இது குறித்து கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் கூறியதாவது:


பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து அமைச்சர் கூறியிருந்தார். வாட்ஸ்-அப் மூலம் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் என ஒன்று உலா வருகிறது. இதனை அடிப்படையாக வைத்து நாங்கள் மாணவர்களிடம் குறைக்கப்பட்ட பாடங்களை புத்தகத்தில் இருந்து நீக்க அறிவுறுத்தினோம். 


அதன்படி, மாணவர்கள் சம்மந்தப்பட்ட பாடங்களை பேனாவை பயன்படுத்தி நீக்கி வருகின்றனர். ஆனால், கல்வித்துறை அதிகாரிகளிடம் இருந்து பாடங்கள் குறைப்பு குறித்து முறையாக அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவல்களும் தற்போது வரை வரவில்லை.


எல்லாம் வாய்மொழி உத்தரவாகத்தான் இருக்கிறது. இதனை நம்புவதா? வேண்டாமா? என தெரியவில்லை. மேலும், பாடங்களை நீக்காமல், பாடத்தில் உள்ள சில பக்கங்களை நீக்கியுள்ளனர். 


இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த நீக்கப்பட்ட பக்கத்தில் இருந்து பொதுத்தேர்வில் கேள்விகள் கேட்கப்படுமா? என்ற அச்சமும் உள்ளது. இருப்பினும், மாணவர்களுக்கு நீக்கப்பட்ட பாடங்கள் குறித்து தெரிவித்து வருகிறோம். 


ஆசிரியர்கள், மாணவர்களின் குழப்பத்தை நீக்க அரசு நீக்கப்பட்ட பக்கங்கள் குறித்த தெளிவான அறிவுரைகளை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Source:தினகரன் செய்தி

No comments:

Post a Comment