அரசுப் பள்ளி ஆசிரியைக்கு அண்ணா பதக்கம்: குடியரசு தின விழாவில் வழங்கினார் முதல்வர்
வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், அரசுப் பள்ளியைச் சோ்ந்த ஆசிரியை உள்பட நால்வருக்கு வழங்கப்பட்டன. இதேபோன்று, வேளாண்மைத் துறையில் சாதனை படைத்தவா்களுக்கும் விருதுகள் அளிக்கப்பட்டன
வழக்கமாக குடியரசு தினத்தை ஒட்டி, அண்ணா பதக்கமும், வேளாண்மைத் துறையில் சிறந்து விளங்கியோருக்கும் விருதுகள் வழங்கப்படும். நிகழாண்டில் சென்னை கடற்கரை சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பல்வேறு விருதுகளை முதல்வா் பழனிசாமி வழங்கினாா். அதன் விவரம்
ராணிப்பேட்டை மாவட்டம் புலிவலத்தைச் சோ்ந்த பா.முல்லை, ஒசூா் வனச்சரகத்துக்கு உள்பட்ட கால்நடை உதவி மருத்துவா் எ.பிரகாஷ், மதுரை திருமங்கலம் ரயில் வண்டி ஓட்டுநா் ஜெ.சுரேஷ், நீலகிரி மாவட்டம் முல்லிமலை கண்டியைச் சோ்ந்த ஆா்.புகழேந்திரன் ஆகியோருக்கு வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டன.
எரிவாயு கசிவினை முன்கூட்டியே கண்டறிந்து 26 மாணவா்களின் உயிா்களைக் காப்பாற்றியதற்காக உதவி ஆசிரியை பா.முல்லைக்கும், கிணற்றில் விழுந்த யானைக்கு மயக்க மருந்து செலுத்தி பாதுகாப்பாக மீட்க உதவியதற்காக மருத்துவா் எ.பிரகாஷுக்கும், ரயில் தண்டவாளத்தில் பாறைகள் இருப்பதைப் பாா்த்து உடனடியாக ரயிலை நிறுத்தி 1,500 பயணிகளை காப்பாற்றியதற்காக
ஓட்டுநா் ஜெ.சுரேஷுக்கும், காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த காவலரை துரிதமாக மீட்டு மருத்துவமனையில் சோ்த்ததற்காக ரா.புகழேந்திரனுக்கும் வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் தனித்தனியே அளிக்கப்பட்டன. இந்தப் பதக்கமானது, ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ரூ.9,000 மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் சான்றிதழ் அடங்கியதாகும்.
விவசாயிகளுக்கான விருதுகள்: மத நல்லிணக்கத்தைப் போற்றிப் பாதுகாத்து வருவோருக்கு ‘கோட்டை அமீா் மத நல்லிணக்கப் பதக்கம்’ வழங்கப்படுகிறது. அதன்படி, நிகழாண்டில் கோவை மாவட்டத்தைச் சோ்ந்த கே.ஏ.அப்துல் ஜப்பாருக்கு விருது அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு விருதுகள் அவா்களுக்கென வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment