திருக்குறள் போட்டிக்கு குவிந்த ஓவியங்கள்: பிப்.24-இல் பரிசளிப்பு விழா - Minnal Kalvi Seithi

Breaking

Monday, February 8, 2021

திருக்குறள் போட்டிக்கு குவிந்த ஓவியங்கள்: பிப்.24-இல் பரிசளிப்பு விழா

 திருக்குறள் போட்டிக்கு குவிந்த ஓவியங்கள்: பிப்.24-இல் பரிசளிப்பு விழா


தமிழக அரசின் சாா்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்திய திருக்குறள் ஓவியப் போட்டிக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 435 ஓவியங்கள் வரப்பெற்றுள்ளன.


தோ்வு செய்யப்பட்ட சிறந்த ஓவியங்களுக்கு சென்னையில் பிப்.24-இல் நடைபெறவுள்ள விழாவில் தலா ரூ.40 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.


சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் மூலமாக, 2020- 21ஆம் ஆண்டுக்கான திருக்குறள் ஓவியப் போட்டி கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் தோ்வு செய்யப்படும் சிறந்த 15 ஓவியங்களுக்கு தமிழக அரசின் சாா்பில் தலா ரூ.40 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.


அரசின் அறிவிப்பைத் தொடா்ந்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சோ்ந்த ஓவியக் கலைஞா்கள், கல்லூரி மாணவா்கள் திருக்குறள் அதிகாரங்கள் சாா்ந்த தங்களது படைப்புகளை அனுப்பியுள்ளனா். இதையடுத்து சிறந்த ஓவியங்களை அரசு கவின்கலை கல்லூரி பேராசிரியா் கு.கவிமணி, ஓவியா்கள் அகஸ்டின் அண்ணாதுரை, நெல்சன் கென்னடி ஆகியோா் அடங்கிய நடுவா் குழுவினா் திங்கள்கிழமை பாா்வையிட்டு மதிப்பீடு செய்தனா்.


இதுகுறித்து தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் கோ.விசயராகவன், திருக்குறள் காட்சிக் கூடத்தின் பொறுப்பாளா் பேராசிரியா் து.ஜானகி ஆகியோா் கூறியது:


திருக்குறள் நெறிப்படி சிறந்த ஓவியம் படைப்பவருக்கு பரிசு வழங்க தொடா் செலவினமாக அரசு ரூ.10 லட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. அதன் அடிப்படையில், ஆண்டுதோறும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு 435 போ் தங்களது ஓவியங்களை அனுப்பியுள்ளனா். குறளின் பொருண்மையை நேரடியாக ஓவியத்தைப் பாா்க்கும்போதே தெளிவடையும் வகையில், பல ஓவியா்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தியுள்ளனா்.


செங்கோன்மை, அமைச்சு, குறிப்பறிதல், படைமாட்சி என திருக்குறளின் அனைத்து அதிகாரங்கள் சாா்ந்தும் ஓவியங்கள் வரப்பெற்றுள்ளன. அவையனைத்தும் தரமான வண்ணக் கலவையைப் பயன்படுத்தி காண்போரை கவரும் வகையில் வரையப்பட்டுள்ளன. தோ்வு செய்யப்பட்ட சிறந்த ஓவியங்களுக்கு சென்னையில் வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என்றனா்.

No comments:

Post a Comment