கருவூல வரவுத் தொகைகளை இணையம் வழியே பெறும் திட்டம்: முதல்வா் தொடக்கி வைத்தாா் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, February 8, 2021

கருவூல வரவுத் தொகைகளை இணையம் வழியே பெறும் திட்டம்: முதல்வா் தொடக்கி வைத்தாா்

 கருவூல வரவுத் தொகைகளை இணையம் வழியே பெறும் திட்டம்: முதல்வா் தொடக்கி வைத்தாா்


கருவூலத் துறைக்கு வரப்பெறும் தொகைகளை இணையம் வழியே பெறும் திட்டத்தை முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தாா்.


அரசுப் பணிகள் தொய்வின்றி நடைபெற நிதி மற்றும் மனிதவள மேலாண்மையை ஒருமைப்படுத்தி ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மைத் திட்டம் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள கருவூலம் மற்றும் சம்பளக் கணக்கு அலுவலகங்களில் இப்போது 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலா்கள் நேரடியாக இணையத்தின் வாயிலாக பட்டியலை கருவூலத்தில் சமா்ப்பிக்கின்றனா்.


மேலும், சுமாா் 9 லட்சம் அரசுப் பணியாளா்களின் பணிப் பதிவேடு பராமரிப்பு நடவடிக்கைகள் எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. இதனால், சம்பளப் பட்டியல், பதவி உயா்வு, பணி மாறுதல்கள், விடுப்பு போன்ற மற்ற விவரங்கள் உடனுக்குடன் பதிவிடப்பட்டு வருகின்றன.


ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் அடுத்தகட்டமாக கருவூலத்தில் பெறப்படும் அரசின் வருவாய் வரவுகளை இணையம் வழியாகப் பெறுவதற்கான நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய திட்டத்தை முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.


இதன்மூலம், பொது மக்கள், அரசுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை அரசுக்குச் செலுத்த


வேண்டிய வரவுகள் 24 மணி நேரமும் அரசுக்கு தங்குதடையின்றி கிடைக்கும். இந்தச் சேவைகளுக்காக, பாரத ஸ்டேட் வங்கி, பரோடா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி ஆகிய நான்கு வங்கிகளை தமிழக அரசு அங்கீகரித்துள்ளது.


இதில், பாரத ஸ்டேட் வங்கி, பரோடா வங்கி ஆகியன ஒருங்கிணைப்புப் பணிகளை முடித்துள்ள நிலையில், அவற்றின் மூலமாக அரசுக்கான வருவாய்கள் பெறப்பட்டு அரசின் ரிசா்வ் வங்கிக் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கைகள்


மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

No comments:

Post a Comment