4 கோடி மாணவர்களுக்கு ரூ.35,219 கோடி உதவித்தொகை: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, February 1, 2021

4 கோடி மாணவர்களுக்கு ரூ.35,219 கோடி உதவித்தொகை: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

 4 கோடி  மாணவர்களுக்கு ரூ.35,219 கோடி உதவித்தொகை: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு


அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி எஸ்சி மாணவர்களுக்கு ரூ.35,219 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


பட்டியல் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்புக்கு பிறகு கல்வியைத் தொடர்வதை ஊக்கப்படுத்துவதற்காக PMS-SC என்னும் பள்ளிக்குப் பிறகான (போஸ்ட் மெட்ரிக்) கல்வி உதவித்தொகைத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ரூ.2.50 லட்சம் ஆண்டு வருமானம் உள்ள பட்டியலினப் பெற்றோரின் பிள்ளைகளுக்கு மட்டுமே இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது


இந்தக் கல்வி உதவித் தொகை, பராமரிப்புப் படி, கல்வி நிறுவனங்களுக்குத் திரும்ப அளிக்கப்படாத கட்டணங்கள், கல்விச் சுற்றுலா, ஆய்வு அறிக்கை தயார் செய்வது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வழங்கப்பட்டு வருகிறது.


இந்த உதவித்தொகைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டில் குறைக்கப்பட்டுள்ளதாகப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 3-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.


அப்போது அவர், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்துக் கூறும்போது, ''தாழ்த்தப்பட்டோரின் நலனுக்காக போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைத் திட்டத்தை நாங்கள் மாற்றி அமைத்துள்ளோம். இதுதொடர்பாக மத்திய அரசின் உதவி மேம்படுத்தப்பட்டுள்ளது. இனி அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.35,219 கோடி போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 4 கோடி மாணவர்கள் பயன்பெறுவர்'' என்று தெரிவித்தார்.


2020-21 ஆம் நிதியாண்டில் மத்திய அரசு போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகைத் திட்டத்துக்காக ரூ.2,987.33 கோடி ஒதுக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment