கேங்மேன் வேலை பணி ஆணை: முழு விபரம் வெளியிட கோரிக்கை
கேங்மேன்' பதவிக்கு, பணி நியமன ஆணை எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்ற முழு விபரத்தையும் வெளியிடுமாறு, மின் வாரியத்திற்கு, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக மின் வாரியம், கள பணிகளை மேற்கொள்ள, 'கேங்மேன்' என்ற பதவியில், 10 ஆயிரம் பேரை நியமிக்க உள்ளது. இதற்காக, தேர்வு செய்யப்பட்ட, 9,613 பேருக்கு, திங்களன்று இரவு, பணி நியமன ஒதுக்கீட்டு ஆணை, மின்னஞ்சலில் அனுப்பப்பட்டது.இந்நிலையில், பணி நியமன ஆணை எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதை வெளியிடக் கோரி, 100க்கும் மேற்பட்ட தேர்வர்கள், சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், நேற்று காலை குவிந்தனர்.
அங்குள்ள அதிகாரிகளிடம், விபரங்களை கேட்டனர். அதிகாரிகளின் பதிலை ஏற்காமல், அலுவலகத்தில் காத்திருந்தனர். திடீரென, மதியம் வாரிய அலுவலகம் வந்த, மின்துறை அமைச்சர் தங்கமணியிடமும், அதே கோரிக்கையை வலியுறுத்தினர். இதுகுறித்து, தேர்வர்கள் கூறியதாவது: மின் வாரியத்தில், பல ஆண்டுகளாக, ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிகிறோம். கேங்மேன் பதவிக்கு நடத்திய, உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின், எழுத்து தேர்வில் பங்கேற்றோம். அதிலும், 60 மதிப்பெண்ணிற்கு அதிகமாக எடுத்துள்ளோம்.
ஆனால், பணி நியமன பட்டியலில், எங்களின் பெயர் இல்லை. எங்களை விட, குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் கேட்டால், இட ஒதுக்கீட்டு அடிப்படையில் என்று ஒரு பிரிவினரும், மதிப்பெண் அடிப்படையில் என, மற்றொரு தரப்பினரும், பொறுப்பற்ற முறையில் பதில் தருகின்றனர்.
எனவே, எந்த அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது என்ற முழு விபரத்தை வெளியிட வேண்டும். அப் போது தான், தகுதியான நபர்களுக்கு வேலை வழங்கியது உறுதி செய்யப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர், 'கேங்மேன் தேர்வு, நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடந்தது. சிலர், வேண்டுமென்றே தவறான தகவல் பரப்புகின்றனர்' என்றார்.
No comments:
Post a Comment