தேர்வில் கேள்விக்கு பதில் தெரியாவிட்டால், எதையாவது எழுதிவையுங்கள்: டெல்லி கல்வித்துறை இயக்குநர் மாணவர்களுக்கு கூறிய அறிவுரையால் சர்ச்சை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, February 20, 2021

தேர்வில் கேள்விக்கு பதில் தெரியாவிட்டால், எதையாவது எழுதிவையுங்கள்: டெல்லி கல்வித்துறை இயக்குநர் மாணவர்களுக்கு கூறிய அறிவுரையால் சர்ச்சை

 தேர்வில் கேள்விக்கு பதில் தெரியாவிட்டால், எதையாவது எழுதிவையுங்கள்: டெல்லி கல்வித்துறை இயக்குநர் மாணவர்களுக்கு கூறிய அறிவுரையால் சர்ச்சை


அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் கேள்விக்குப் பதில் தெரியாவிட்டால், அதை அப்படியே விட்டுவிட்டு வராதீர்கள். எதையாவது எழுதிவிடுங்கள். முடிந்தால் அந்த கேள்வியைக்கூட எழுதுங்கள், ஆனால் காலியாக மட்டும் வைக்காதீர்கள் என்று டெல்லி கல்வித்துறை இயக்குநர் உதித் ராய் மாணவர்களிடம் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


12-ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுடன் டெல்லி கல்வித்துறை இயக்குநர் உதித் ராய் நேற்று கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் உதித் ராய் பேசியதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


அவர் மாணவர்களுக்கு வழங்கிய அறிவுரையில் " அரசுத் தேர்வு எழுதும் மாணவர்கள், கேள்விக்கு பதில் தெரியாது என்பதற்காக அந்த கேள்வியை விட்டுவிடாதீர்கள்.


எதையாவது எழுதிவையுங்கள். உங்களின் தேர்வுத்தாளில் ஏதாவது எழுதியிருந்தால், நிச்சயம் மதிப்பெண் அளிக்கப்படும்.


முடிந்தால் கேள்வியை அப்படியேகூட பதில் எழுதும் தாளில் எழுதிவிடுங்கள். ஆனால், காலியாக மட்டும்விட்டு வைக்காதீர்கள். நாங்கள் ஆசிரியர்களிடம் பேசியிருக்கிறோம். பதில் எழுதும் தாளில் ஏதாவது மாணவர்கள் எழுதியிருந்தாலே மதிப்பெண் வழங்குகிறோம் எனத் தெரிவித்துள்ளார்கள்.


மேலும் சிபிஎஸ்இ வாரியத்திடமும் தெரிவித்துள்ளோம். மாணவர்கள் ஏதாவது எழுதியிருந்தாலே மதிப்பெண் வழங்குங்கள் எனத் தெரிவித்துள்ளோம்" எனத் தெரிவித்தார். இந்தவீடியோ சமூக வலைத்தலங்களில் ஓடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த வீடியோ குறித்து காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் கடுமையாக ஆம்ஆத்மி அரசை விமர்சித்து வருகின்றன. இந்த வீடியோ குறித்து கல்வித்துறை இயக்குநர் ராய் பதில் அளிக்க மறுத்துவிட்டார், சிபிஎஸ்இ அமைப்பும் பதில் அளிக்க மறுத்துவிட்டது.


டெல்லி பாஜக ஊடகப்பிரிவு தலைவர் நவீன் குமார் கூறுகையில் " பதில் எழுதும் தாளில் கேள்விகளை எழுதிவைத்துத்தான் ராய் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றாரா. இதுதான் டெல்லியின் கல்வித்தரமா" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


டெல்லி காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் " கேஜ்ரிவால், இது என்ன மாதிரியான கல்வித்திட்டம் எனச் சொல்லுங்கள். மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதை நிறுத்துங்கள்" எனத் தெரிவித்துள்ளது.


இந்த வீடியோவைப் பார்த்து அனைத்து இந்திய பெற்றோர் கூட்டமைப்பின் தலைவர் அசோக் அகர்வால், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் " கல்வித்துறை இயக்குநர் பேசிய வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அரசுத் தேர்வில் பதில் எழுதும் தாளில் எதையாவது எழுதிவையுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதே.


பதில் எழுதும் தாளில் ஏதாவது எழுதியிருந்தால்கூட மதிப்பெண் தரக்கூறி சிபிஎஸ்இ அமைப்பிடமும் பேசியுள்ளதாக ராய் தெரிவித்துள்ளார். இதுபோன்ற அதிகாரி கல்வித்துறையை தரம் தாழ்த்துகிறார். தயவு செய்து நடவடிக்கை எடுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment