தற்கொலைக்கு முயன்ற மாணவருக்கு வீடு தேடிச் சென்று தன்னம்பிக்கை ஊட்டிய கல்வி அமைச்சர்: கல்விக் கட்டணம் செலுத்த வற்புறுத்திய பள்ளிக்கு நோட்டீஸ் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, February 14, 2021

தற்கொலைக்கு முயன்ற மாணவருக்கு வீடு தேடிச் சென்று தன்னம்பிக்கை ஊட்டிய கல்வி அமைச்சர்: கல்விக் கட்டணம் செலுத்த வற்புறுத்திய பள்ளிக்கு நோட்டீஸ்

 தற்கொலைக்கு முயன்ற மாணவருக்கு  வீடு தேடிச் சென்று தன்னம்பிக்கை ஊட்டிய கல்வி அமைச்சர்: கல்விக் கட்டணம் செலுத்த வற்புறுத்திய பள்ளிக்கு நோட்டீஸ்


பெங்களூருவில் உள்ள எச்.எஸ்.ஆர். லே அவுட்டை சேர்ந்தவர் முனியப்பா (40). கட்டிடத் தொழிலாளியான இவரது மகன் ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை பள்ளிக்குச் சென்ற ரமேஷை கல்விக் கட்டணம் செலுத்துமாறு பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியுள்ளது. மேலும் தேர்வு எழுதவும் அனுமதி மறுத்துள்ளது


இதனால் மனமுடைந்த ரமேஷ் வீட்டுக்குச் சென்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை காப்பாற்றிய தந்தை முனியப்பா அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். மேலும் தனதுமகனை பிற மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாக பள்ளி நிர்வாகத்தின் மீது அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்


இதுபற்றி அறிந்த கர்நாடக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் நேற்று முன்தினம் மாணவன் ரமேஷின் வீடு தேடிச் சென்றார்.


அங்கு மாணவரையும், அவரது பெற்றோரையும் சந்தித்துசம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மாணவர் ரமேஷிடம் அமைச்சர் சுரேஷ் குமார், “கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் கட்டிட வேலை பார்த்து படித்த மாணவர் மகேஷ் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். அதை அறிந்து ஏராளமானோர் அவருக்கு உதவி செய்தனர். நீயும் நன்றாக படித்து தேர்ச்சி பெற்றால் உனது பணக் கஷ்டம், மனக் கஷ்டம் எல்லாம் நீங்கிவிடும்” என அறிவுரை கூறினார்.


இதையடுத்து மாணவரை கல்விக் கட்டணம் செலுத்துமாறு வற்புறுத்திய தனியார் பள்ளிக்கு 7 நாட்களில் விளக்கம் அளிக்குமாறு அமைச்சர் சுரேஷ்குமார் நோட்டீஸ் அனுப்பினார்.


தற்கொலைக்கு முயன்ற மாணவரின் வீடு தேடிச் சென்று தன்னம்பிக்கை ஊட்டிய கல்வி அமைச்சர் சுரேஷ்குமாருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

No comments:

Post a Comment