தமிழக பல்கலைக்கழகங்கள் மத்திய அரசால் மறைமுகமாக நிர்பந்திக்கப்படுகிறதா?- உயர்நீதிமன்றம் கேள்வி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, February 15, 2021

தமிழக பல்கலைக்கழகங்கள் மத்திய அரசால் மறைமுகமாக நிர்பந்திக்கப்படுகிறதா?- உயர்நீதிமன்றம் கேள்வி

 தமிழக பல்கலைக்கழகங்கள் மத்திய அரசால் மறைமுகமாக நிர்பந்திக்கப்படுகிறதா?- உயர்நீதிமன்றம் கேள்வி


மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் படிப்புகளுக்கு மத்திய அரசின் இடஒதுக்கீட்டை பின்பற்றும்படி தமிழக பல்கலைக்கழகங்கள் மறைமுகமாக நிர்பந்திக்கப்படுகிறதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


சென்னை உயர்நீதிமன்றத்தில் சைதாப்பேட்டையைச் சேர்ந்த சித்ரா என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'எம்.டெக். பயோ டெக்னாலஜி, எம்.டெக். கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய முதுகலைப் படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தேன். இந்த 2 முதுகலை பட்டப்படிப்புகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் ஏற்பட்ட பிரச்னையால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இல்லை என கடந்த ஜனவரி 29 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


 இந்தப் படிப்புகளுக்கு 49.5 சதவீதமான மத்திய அரசு இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும். தமிழக அரசு வழங்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றக்கூடாது என அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசு நிர்பந்தித்துள்ளது. தமிழக அரசு 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என  உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக இந்த 2 முதுகலை படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டாம் என பல்கலைக்கழகம் முடிவுக்கு  வந்துள்ளது. 


இந்த முடிவு சட்ட விரோதமானது. எனவே, இந்த 2 முதுகலை படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கையை ரத்து செய்து அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இந்த படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது

ஏஐசிடிஇ தரப்பில் இரு படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையை கடந்த டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் முடித்திருக்க வேண்டும். எனவே இனி மாணவர் சேர்க்கை நடத்த வாய்ப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.


 அப்போது மத்திய அரசு தரப்பில், மத்திய அரசு நிதி உதவி செய்யும் படிப்புகளுக்கு தமிழகத்தில் உள்ள வேறு சில பல்கலைக்கழகங்கள் மத்திய இட ஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கையை நடத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் மாணவர் சேர்க்கையை நிறுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


அப்போது  குறுக்கிட்ட நீதிபதி, மாணவர்களுக்காக பல பல்கலைக்கழகங்கள் புதிய படிப்புகளை உருவாக்கி வரும்போது, அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் 25 ஆண்டுகளாக நடத்தி வரும் படிப்பை நிறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.


யுஜிசி விதிகளில் மாநில இட ஒதுக்கீட்டை பின்பற்ற அறிவுத்தப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இட ஒதுக்கீட்டை பின்பற்றும்படி மறைமுகமாக நிர்பந்திக்கப்படுகிறதா என மத்திய அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அரசு தரப்பில் அப்படி எண்ணம் எதுவும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.


இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, எந்த இட ஒதுக்கீட்டை பின்பற்றுவது என தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது ஏன்? என அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கேள்வி எழுப்பினார். மேலும், மத்திய அரசு இடஒதுக்கீட்டை பின்பற்றும்படி எழுதப்பட்ட கடிதம்தான் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் நடைபெற்றுள்ள அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் என நீதிபதி குற்றம்சாட்டினார்.


நிறுத்தப்பட்ட படிப்புகள் மூலம் எத்தனை நிபுணர்கள் உருவாகியுள்ளனர் என ஆய்வு செய்து தெரிவிக்க மனுதாரர் தரப்பு வழக்குரைஞருக்கு அறிவுறுத்தினார்.


எம்.டெக். மாணவர் சேர்க்கை விவகாரம் குறித்த தெளிவான விளக்கத்துடன் வரும்படி மத்திய அரசுக்கு அறிவுறுத்தி, இந்த வழக்கில் யுஜிசியை  எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டார். இரண்டு பிரிவுகளில் தலா 45 மாணவர்களை அனுமதிப்பதற்கான பேச்சுவார்த்தையை ஏஐசிடிஇயுடன் உடனடியாக மேற்கொள்ளும்படி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை  செவ்வாய்க்கிழமை (பிப்.16) ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment