திடீர் குழப்பம்:9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்தப்படுமா? பள்ளிக் கல்வித்துறை விளக்கம் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, March 17, 2021

திடீர் குழப்பம்:9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்தப்படுமா? பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

 திடீர் குழப்பம்:9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்தப்படுமா? பள்ளிக் கல்வித்துறை விளக்கம்


தமிழகத்தில் 9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது -பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அறிக்கையைத் தொடர்ந்து, பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்படலாம் என தகவல் பரவியது.


கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்த நிலையில், சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டன.


அதனை தொடர்ந்து சில தினங்களில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. அண்மையில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைந்த காலத்தில் பாடங்களை நடத்தி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவித்தார்.*


ஆனால் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளும் நடைபெறாத நிலையில், 10 ஆம் வகுப்பு மாணவர்களை எந்த அடிப்படையில் 11 ஆம் வகுப்பு அல்லது தொழிற்கல்வியில் சேர்ப்பது என்ற குழப்பம் நீடித்து வந்தது. இது குறித்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படாத நிலையில், தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், பள்ளிகளுக்கு அனுப்பிய அனுப்பியுள்ள சுற்றறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.


பள்ளிகளுக்கு தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து பள்ளிகளிலும் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில், இந்த மாத இறுதிக்குள் பள்ளி அளவில் பொதுத்தேர்வு நடத்தி முடிக்க வேண்டும், அதற்கான மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.


எனவே, மாநில அளவில் பொதுத்தேர்வு நடைபெறாத போதிலும், பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என தகவல் பரவியது.*


இதையடுத்து தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட சுற்றறிக்கை குறித்து, பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் விசாரணை நடத்தினர். அத்துடன் தஞ்சை முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட உத்தரவை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


தமிழகம் முழுவதும் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த வகையிலான தேர்வும் நடைபெறாது என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் திட்டவட்டமாக அறிவித்தார்


முதல்வர் அறிவித்தபடி எந்த தேர்வும் இல்லாமல் அனைவரும் தேர்ச்சி என்ற நிலைதான் தற்போதும் இருக்கிறது. தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தவறுதலாக செயல்பட்டிருக்கிறார். அந்த உத்தரவை திரும்ப பெறும்படி உத்தரவிட்டிருப்பதாக  பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார்

No comments:

Post a Comment