கொரோனா கட்டளை மையம் : '108'க்கு பதிலாக '104'ஐயும் அழைக்கலாம் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, May 12, 2021

கொரோனா கட்டளை மையம் : '108'க்கு பதிலாக '104'ஐயும் அழைக்கலாம்

 கொரோனா கட்டளை மையம் : '108'க்கு பதிலாக '104'ஐயும் அழைக்கலாம்


சென்னை:''சென்னையில் கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்த பரிசோதனை செய்ய வருபவர்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்படுகிறது'' என மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி கூறினார்.


சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கட்டளை மையத்தை பேடி நேற்று ஆய்வு செய்தார்.பின் அவர் அளித்த பேட்டி:கட்டளை மையத்தை உயர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த மையத்தில் '104' என்ற அவசர எண்ணுக்கு வரும் அழைப்புகளில் நோயாளிகளின் நிலையை தெரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.


சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தால் கட்டளை மையத்தில் உள்ள குழு வாயிலாக கும்மிடிப்பூண்டியில் உள்ள நிறுவனத்தில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஏற்பாடு செய்து தரப்படுகிறது.அதேபோல் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகள் 104 எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய பின் கட்டளை மையத்தின் வாயிலாக படுக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது.


இந்த மையத்தை போல் மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் மையம் அமைக்க முடிவு செய்துள்ளோம்.மண்டலங்களில் இருக்கக்கூடிய டாக்டர்கள் நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்வதற்கான உதவிகளை செய்து வருகின்றனர்.அதேபோல் வீட்டு தனிமையில் இருக்கும் நோயாளிகளுக்கு தொலைபேசி வாயிலாக ஆலோசனை வழங்கப்படுகிறது.


அந்த வகையில் மாநகராட்சி ஆலோசனை மையம் மற்றும் டி.எம்.எஸ். கட்டளை மையத்தையும் ஒருங்கிணைத்து நோயாளிகளுக்கு உதவி செய்ய மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் முயற்சி செய்து வருகின்றன. மாநகராட்சி சார்பில் புதிய நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. இதற்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பின் மருந்துகள் வழங்கப்பட்டன.


தற்போது அறிகுறி பயத்துடன் பரிசோதனை செய்ய வருபவர்களுக்கு அறிகுறி உடையவர்களாக கருதி பரிசோதனை முடிவு வருவதற்கு முன் அவர்களுக்கு மருந்து மாத்திரை அடங்கிய பெட்டகம் வழங்கப்படுகிறது.இதற்காக மருந்து பெட்டகங்கள் தயார் செயயப்பட்டு வருகிறது. இந்த மருந்துகளை முன்னதாக சாப்பிடுவதால் உடல்நிலை பாதுகாக்கப்படும். இது ஒரு புதிய முயற்சி. இதன் வாயிலாக கொரோனா தொற்று குறையும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment