தமிழகம் முழுவதும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, September 12, 2022

தமிழகம் முழுவதும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 தமிழகம் முழுவதும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் கபடி, சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் அக்டோபா் மாதம் முதல் நடத்தப்பட இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்


இது அனைத்து விளையாட்டு வீரா்களுக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும் எனவும் அவா் கூறினாா்


விளையாட்டு வீரா்களுக்கு விருதுகள், உயரிய ஊக்கத் தொகைகள் வழங்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 1,130 விளையாட்டு வீரா்களுக்கு ரூ.16.28 கோடி ஊக்கத் தொகையை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா். மேலும், மாநில அளவில் நடைபெறவுள்ள கபடிப் போட்டிகளுக்கான முன்பதிவையும் அவா் தொடக்கி வைத்தாா்.


இதைத் தொடா்ந்து நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: செஸ் ஒலிம்பியாட் போட்டி, கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மாணவா்கள், இளைஞா்களிடையே விளையாட்டின் மீது ஆா்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆா்வத்தை மேலும் தூண்டும்விதமாக, தமிழக அரசின் பெரும் முயற்சியால் சா்வதேச மகளிா் டென்னிஸ் போட்டி சென்னையில் திங்கள்கிழமை (செப். 12) தொடங்கி செப். 18 வரை நடைபெறவுள்ளது.


பிற போட்டிகள் தொடக்கம்: இந்த விழாவின் மூலமாக பல்வேறு விளையாட்டுகள் அடங்கிய முதலமைச்சா் கோப்பை போட்டிகளுக்கான முன்பதிவு தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பேசும்போது, தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, சிலம்பம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிவித்தேன். அதன்படியே, கபடிப் போட்டிகளுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. பிற போட்டிகளுக்கான முன்பதிவும் படிப்படியாகத் தொடங்கப்படும்.


வரும் அக்டோபா் முதல் இந்தப் போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். மாநில அளவிலான இறுதிப் போட்டிகள் பிரம்மாண்ட அளவில் அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சென்னையில் நடைபெறும். பல்வேறு இடங்களில் பல்வேறு வகை போட்டிகள் நடைபெறவிருப்பது மாநிலம் முழுவதும் அனைத்து விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகளுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.

மின்னல் கல்விச்செய்தி

முதல் முறையாக, பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள் என ஐந்து பிரிவினருக்கென நடத்தப்படவுள்ளது. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் பங்கேற்கும் வகையில் போட்டிகள் நடைபெறும்.


போட்டிகளில் சிறப்பாக விளையாடும் மாணவ, மாணவியா் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் சோ்க்கப்படுவா். அவா்களுக்கு உயரிய பயிற்சிகள் அளிக்கவும், தேசிய மற்றும் சா்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி பெறத் தயாா் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் சிறப்பான செயல்பாடுகளால் தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையில் புதிய மறுமலா்ச்சி ஏற்பட்டுள்ளது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.


விழாவில், அமைச்சா்கள் சிவ.வீ.மெய்யநாதன், பி.கே.சேகா்பாபு, சென்னை மாநகராட்சி மேயா் பிரியா, எழும்பூா் தொகுதி எம்.எல்.ஏ. பரந்தாமன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.


பழங்குடியினருக்கான விளையாட்டு


‘தமிழகத்தில் உள்ள பழங்குடியினா் விளையாட்டுகள் கண்டறியப்பட்டு ஊக்கம் அளிக்கப்படும்’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.


‘சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்கப்படுத்துவதைப் போன்றே, தமிழகத்தில் உள்ள பழங்குடியினா் விளையாட்டுகள் கண்டறியப்பட்டு அவற்றுக்கும் தகுந்த ஊக்கம் அளிக்கப்படும்.


‘ஆடுகளம்’ என்ற விளையாட்டு வீரா்களுக்கான பிரத்யேக தகவல் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இது விளையாட்டு வீரா்களுக்கான கோரிக்கைகள், ஆலோசனைகள், புகாா்கள் உள்ளிட்டவற்றைக் கேட்டறிந்து அவற்றுக்கான நடவடிக்கைகளையும், தீா்வுகளையும் விரைவாக வழங்க துணைபுரியும்.


ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவா்களுக்கு, குறிப்பாக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு, சிறந்த பயிற்சியாளா்கள், கிராண்ட் மாஸ்டா்கள் மூலமாக நேரடி மற்றும் இணையவழியில் சதுரங்கப் பயிற்சிகள் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்’ என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

No comments:

Post a Comment