நீட் தேர்வில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் தோல்வி :ஏன்? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, September 12, 2022

நீட் தேர்வில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் தோல்வி :ஏன்?

 நீட் தேர்வில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் தோல்வி :ஏன்?


இந்த ஆண்டு, 'நீட்' தேர்வில் தமிழக மாணவர் தேர்ச்சி, கடந்த ஆண்டை விட, 3 சதவீதம் குறைந்துள்ளது இது குறித்து கல்வியாளர் சங்கரநாராயணன் கூறியதாவது:தனியார் பள்ளி மாணவர்களோடு போட்டி போடும் அளவுக்கு, அரசு பள்ளி மாணவர்களின் தகுதியும், திறனும் இருக்க வேண்டும் என்பதற்காக, பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசு, இரண்டு விஷயங்களை செய்தது. ஒன்று, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய அளவிலான பாட திட்டத்துக்கு இணையாக தமிழக பாட திட்டத்தையும் தரம் உயர்த்த ஏற்பாடு செய்தது.


கடந்த 2019ல் நடந்த நீட் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களில் 90 சதவீதத்துக்கும் கூடுதலான வினாக்கள், தமிழக பாட திட்டத்தில் இடம் பெற்றதே இதற்கு சான்று என, கல்வியாளர்கள் பலரும் குறிப்பிட்டனர். இரண்டாவது, அரசு பள்ளிகளில், சிறப்பு நிறுவனங்கள் வாயிலாக, நீட் தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனாலும், அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் ஓரளவுக்கு தேர்ச்சி அடைய துவங்கினர்


ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக இந்த நடைமுறை முழுமையாக தடைபட்டது. 'கொரோனா'வை காட்டி, 2019ல் 10ம் வகுப்பு தேர்வு எழுதி, 'ஆல் பாஸ்' வாயிலாக பிளஸ் 1க்கு தேர்ச்சி அடைந்த மாணவர்கள் தான், இந்த ஆண்டு பிளஸ் 2 வகுப்புக்கு பின் நீட் தேர்வு எழுதினர். கொரோனாவால் பள்ளிக்கே வராத அவர்கள், பிளஸ் 1 பாடத் திட்டங்களை முழுமையாக படிக்கவில்லை. இந்த ஆண்டும், ஏழு மாதங்களுக்கு பள்ளிகள் இயங்கவில்லை. பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு முந்தைய கடைசி மூன்று மாத காலம் மட்டுமே, அவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர்


அங்கும் பாடங்கள் முழுமையாக சொல்லி கொடுக்கப்படவில்லை. இதனால், அரசு பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோர், முழுமையாக பாட திட்டங்களை படிக்காமலேயே பிளஸ் 2 பொது தேர்வை எழுதினர். அதே நிலையிலேயே நீட் தேர்வையும் எழுத, பெரும்பாலான அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தோல்விடைந்தனர். சொல்லப்போனால், நீட் தேர்வெழுதிய அரசு பள்ளி மாணவர்களில் 80 சதவீதம் பேர் தோல்வியை சந்தித்துள்ளனர். மீதம் இருக்கும் 20 சதவீதம் பேரில் இருந்து தான், அரசு வழங்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், மருத்துவ படிப்புக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.


அப்படியென்றால், அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தகுதி மற்றும் திறன் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளலாம். என்னதான் இட ஒதுக்கீட்டில் சென்றாலும், அவர்கள் மருத்துவம் படிக்க முடியாமல் தடுமாறும் நிலையே யதார்த்தம்.


கடந்த காலங்களில், மருத்துவ படிப்பின் முதல் இரண்டாம் ஆண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களின் நிலை மிகவும் மோசம் என, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை கழக தேர்வுத்துறை கூறுகிறது.இது ஒரு பக்கம் என்றால், இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள், நீட் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற முடியாமல் போனதற்கான மிக முக்கிய காரணம், அரசியல்வாதிகள் கொடுக்கும் பொய்யான வாக்குறுதிகள் தான்


இதை நம்பியே, அரசு பள்ளி மாணவர்கள் பலரும், முழுமையாக நீட் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளாமல் விட்டு விட்டனர். பெற்றோருக்கும் இப்படியொரு குழப்பம் இருந்தது.மருத்துவப் படிப்பில் சேர, நீட் தேர்வு தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 112 ஆக இருந்தது, இந்த ஆண்டு 94 ஆக குறைந்து விட்டது. அதாவது 720 மதிப்பெண்களுக்கு நடக்கும் நீட் தேர்வில், 94 மதிப்பெண் பெற்றிருந்தாலே, தேர்ச்சி என்ற நிலையை எட்டி விடுகிறது.


இந்த மதிப்பெண்ணை கூட பெற முடியாமல் தான், இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய 80 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.தனியார் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் பயிற்சி வகுப்பு உள்ளிட்ட பல பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்படுகின்றன. இதனால், அடுத்து என்ன படிக்க வேண்டும் என்ற தெளிவான இலக்குடன் தனியார் பள்ளி மாணவர்கள் தயாராகின்றனர். இது போன்ற எந்த பயிற்சி வகுப்பும் இல்லாததாலேயே, அரசு பள்ளி மாணவர்கள், நீட் தேர்வை எப்படி எதிர்கொள்வது, எப்படி தயாராவது என புரியாமல், குழப்பம் அடைகின்றனர்


எங்கே தோல்வி வந்துவிடுமோ என்ற பதற்றத்தில், தற்கொலை செய்து கொள்கின்றனர்


அரசு பள்ளிகளில் பிளஸ் 1, 2 வகுப்புகளுக்கான ஆசிரியர் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. பல பள்ளிகளில், பாடங்களை நடத்த போதுமான ஆசிரியர்கள் இல்லாததும் ( மின்னல் கல்விச்செய்தி ) பெரும் குறை. கொரோனா காலத்தில் தனியார் பள்ளி மாணவர்கள், 'ஆன்லைன்' வகுப்புகளில் தொடர்ந்து பாடங்களை படித்தனர். நீட் தேர்வுக்கான வகுப்புகளிலும் ஆன்லைன் வாயிலாகவே கலந்து கொண்டனர். படிப்பு தொடர்ந்தபடி இருந்தது. ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி 'டிவி' வாயிலாகவே பாடம் எடுக்கப்பட்டது.


மாணவர்கள் பாடங்களை கவனிக்கின்றனரா, புரிந்து கொள்கின்றனரா என எதுவும் தெரியாமல் கல்வி 'டிவி' வகுப்புகள் கடமைக்கு நடத்தப்பட்டன.என்னதான் என்.சி.இ.ஆர்.டி., பாட திட்டத்தை விட, கூடுதல் தரத்தோடு, தமிழக பாட திட்டத்தின் நிலை உயர்த்தப்பட்டிருந்தாலும், அரசு பள்ளிகளில் அடிப்படை விஷயங்களை செய்யாத வரை, நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி குறைய தான் செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment