மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாதிரி பள்ளிகளுக்கு தன்னார்வலர்கள்
தனியார் பள்ளிகளை போன்று, அரசின் மாதிரி பள்ளிகளிலும், 'மார்க்கெட்டிங் பார்முலா' அடிப்படையில், மாணவர்களை சேர்க்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கும் வகையில், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் தனியாக உண்டு, உறைவிட வசதியுடன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதை பின்பற்றி, தமிழக பள்ளிக்கல்வித் துறையிலும், மாதிரி பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டந்தோறும் குறைந்தபட்சம், ஒரு மாதிரி பள்ளி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றில், உணவு, இருப்பிட வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில், கூடுதல் மாணவர்களை சேர்க்கும் வகையில், மாநில அளவில், 3,000 தன்னார்வலர்களை நியமிக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள், திறமையான பட்டதாரிகள் உள்ளிட்டோரை, இந்த பணிக்கு தேர்வு செய்ய உள்ளனர்.
அவர்களை தனியார் பள்ளிகளின், 'மார்க்கெட்டிங் பார்முலா' போன்று, 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும், 'டாப்பர்' மாணவர்களையும், அவர்களின் பெற்றோரையும் சந்தித்து, மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் மட்டுமின்றி, நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட நுழைவுத் தேர்வு சிறப்பு பயிற்சி வகுப்புகளும் இலவசமாக நடத்தப்பட்டு, அவர்களுக்கான உயர் கல்விக்கும் ஏற்பாடு செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment