வரும் 8ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ள போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றால் ஊதியம் கிடையாது என தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
அரசுத்துறை பணிகளை தனியாருக்கு மாற்றக்கூடாது, புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அடிப்படை ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்திய மத்திய அரசு ஊழியர்கள் சங்கத்தினர் வரும் 8ஆம் தேதி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் யாரும் பங்கேற்க கூடாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது.அவ்வாறு பங்கேற்றால் அவர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது.
அத்துடன் போராட்டத்தில் பங்கேற்கு ஊழியர்களின் பட்டியலை அனுப்புமாறும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவ விடுப்பு மற்றும் முன்னதாக பெறப்பட்ட விடுப்பு தவிர, வேறு யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
தொழிலாளர்களின் நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும் ஏஐடியுசி, சிஐடியு, ஏஐயுடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட மத்திய தொழிலாளர் சங்கம் விடுத்த அறைகூவலை ஏற்று, பல துறைகளில் உள்ள தொழிலாளர்களுடன் இணைந்து வங்கி ஊழியர்களும் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை (ஜனவரி 8, 9) ஆகிய இரு நாள்கள் அகில இந்திய பொதுவேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.இந்த வேலைநிறுத்தத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், காப்பீட்டுத் துறை ஊழியர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பர் என தொழிலாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், ஜனவரி 8-ம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment