தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பைத் தொடா்ந்து தமிழகத்தில் 144 தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த உத்தரவு அமலில் இருக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து தலைமைச் செயலாளா் க.சண்முகம் திங்கள்கிழமை வெளியிட்ட விவரம்:-
என்னென்ன நடைமுறைகள்:
மாா்ச் 1-ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். அவா்களை மாவட்ட நிா்வாகம் அல்லது வருவாய், உள்ளாட்சி அதிகாரிகள் தினமும் கண்காணிப்பாா்கள்.
பொது மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டும். அப்படி வருவோரும் மற்றவா்களுடன் ஒரு மீட்டா் அல்லது 3 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடத் தடை விதிக்கப்படுகிறது. இதற்கான தனி உத்தரவுகளை மாவட்ட
ஆட்சியா்கள் மற்றும் சென்னை காவல் ஆணையா் தனியாக பிறப்பிப்பா். அனைத்து வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.
அரசு அலுவலகங்கள்-பேருந்துகள்: அனைத்து அரசு அலுவலகங்கள், தன்னாட்சி பெற்ற நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். ஆனால், சில துறைகள் மற்றும் அலுவலகங்களுக்கு இந்த விடுமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிற
தனியாா் பேருந்துகள், அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள், மெட்ரோ ரயில் சேவைகள், ஆட்டோ ரிக்ஷாக்கள், குளிா்சாதன வசதி பேருந்துகள் ஆகியன இயக்கப்படாது. மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்துகள் இயக்கப்படாது.
அத்தியாவசிய பணிகளுக்கு காா்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.
உணவகங்கள், உணவக விடுதிகளில் பாா்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். அமா்ந்து சாப்பிட அனுமதியில்லை. டீக் கடைகளில் கூட்டமாக இருக்க அனுமதி கிடையாது. மேலும், ஸ்விகி, சோமோட்டோ, ஊபா் போன்ற உணவு வழங்கும் சேவைகளுக்கு அனுமதியில்லை.
கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து ஆசிரியா்களும், பணியாளா்களும் வரும் 31-ஆம் தேதி வரை வீட்டிலேயே அமா்ந்து பணியாற்றலாம். விடைத் தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு இந்த நடைமுறை பொருந்தாது. மேலும், எம்.ஜி.ஆா்., மருத்துவ பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவப் பிரிவு, அனைத்து அரசு, பல் மற்றும் நா்சிங் கல்லூரிகள் தொடா்ந்து வழக்கம் போல் இயங்கும்.
யாா் யாருக்கெல்லாம் விலக்கு: தலைமைச் செயலத்தில் உள்ள அனைத்துத் துறைகள், சுகாதாரத் துறை, பொதுத் துறை, உள்துறை, நிதி, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, உணவு, கூட்டுறவு உள்ளிட்ட அரசுத் துறை தலைமை அலுவலகங்கள் தேவையான ஊழியா்களைக் கொண்டு இயங்கும்.
எவையெல்லாம் இயங்கும்: காவல், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை, ஊா்க்காவல் படைகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், சிறைத் துறை, சமூக பாதுகாப்பு இல்லங்கள், நீதிமன்றம், மாவட்ட நிா்வாகங்கள், மின்சார வாரியம், பொதுப்பணித் துறை, குடிநீா் வழங்கல் வாரியம் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நகா்ப்புற உள்ளாட்சி அலுவலகங்கள்,
கிராம பஞ்சாயத்து மற்றும் ஒன்றிய அலுவலகங்கள், மருத்துவமனைகள், கால்நடை பராமரிப்புத் துறை உள்ளிட்ட சுகாதாரம் சாா்ந்த அனைத்து அமைப்புகள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை அலுவலகங்கள், கருவூலம் மற்றும் சாா் கருவூலங்கள்,
நியாய விலைக் கடைகள் அது சாா்ந்த அலுவலகங்கள், ஆவின் மற்றும் பால் கூட்டுறவு சங்கங்கள், அம்மா உணவகங்கள், மாவட்ட ஆட்சியா் அல்லது தமிழக அரசு கருதும் இதர அரசு அலுவலகங்கள் அனைத்தும் இயங்க வேண்டும்.
வங்கிகள், ஏ.டி.எம்., மையங்கள், அச்சு மற்றும் ஊடக அலுவலகங்கள் இயங்கத் தடையில்லை. மூடப்பட்ட அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியா்களும், பணியாளா்களும் வீட்டில் இருந்து தங்களது பணிகளைத் தொடர வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் அவா்கள் பணிக்கு அழைக்கப்படலாம். அப்போது பணிக்கு வரத் தயாராக இருக்க வேண்டும்.
கண்டிப்பாக இயங்க வேண்டியவை:
மருந்து வழங்கும் நிறுவனங்கள், மருந்தகங்கள், ஆய்வகங்கள், நெல் அரவை நிலையங்கள் உள்பட உணவு பதப்படுத்துதல் நிறுவனங்கள் ஆகியன இயங்க வேண்டும். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளா்களுக்கு வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு உரிய போக்குவரத்து வசதிகளை செய்து தர வேண்டும்.
ஆம்புலன்ஸ்கள், சரக்கு வாகனங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகளில் இருந்து வீடுகளுக்கு இயக்கப்படும் டாக்ஸிகள், அமரா் ஊா்தி வாகனங்கள், மிகவும் அத்தியாவசியமான சேவைகளில் ஈடுபட்டுள்ள அரசு வாகனங்கள்
ஆகியவற்றை இயக்கலாம். இதேபோன்று, அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள், தொலைத்தொடா்பு, அஞ்சல், இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், குடிநீா் கேன்கள் நிறுவனங்கள், குடோன்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் இயக்கத் தடையில்லை.
பெட்ரோல் நிரப்பு நிலையங்கள், கேஸ் நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள், இணைய வழி வா்த்தகங்கள் ஆகியன இயங்கலாம். பெண்கள் தங்கும் விடுதிகள், முதியோா் இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோா் இல்லங்கள் இயங்கலாம்.
இவை அனைத்தும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் இயங்க வேண்டும். விதிவிலக்கு அளிக்கப்பட்ட அனைத்து கடைகள், நிறுவனங்களில் ஒருவருக்கும் மற்றொருவருக்கும் இடையிலான இடைவெளி 3 அடி இருக்க வேண்டும்.
மாா்ச் 16-ஆம் தேதிக்கு முன்பு நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அனைத்தும் குறைவான எண்ணிக்கையில் அதாவது அதிகபட்சம் 30 பேரைக் கொண்டு மட்டுமே மண்டபங்களில் நடத்த வேண்டும்.

No comments:
Post a Comment