வீடுகளில் எல்லை மீறும் உணவு முறை: சாப்பிட்டு தூங்குவோருக்கு ஆபத்து:மருத்துவர் எச்சரிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Monday, April 13, 2020

வீடுகளில் எல்லை மீறும் உணவு முறை: சாப்பிட்டு தூங்குவோருக்கு ஆபத்து:மருத்துவர் எச்சரிக்கை

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால், பலர் தினமும் சாப்பிட்டுவிட்டு, உடற்பயிற்சிகள் செய்யாமல், தூங்கி நாட்களை கழித்து வருகின்றனர்.

இப்படி செய்வது பெரும் ஆபத்து என்று, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவர் எஸ்.இந்திரா தேவி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறை தலைவர் டாக்டர் இந்திரா தேவி கூறியதாவது: கொரோனா ஊரடங்கு உத்தரவால், அரசு, தனியார் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என யாரும் தற்போது வெளியே செல்லாமல் வீடுகளில் இருக்கின்றனர். இவர்கள் கடந்த 20 நாட்களாக சாப்பிடுவது, தூங்குவது, டிவி பார்ப்பது என்று தான் நாட்களை கழித்து வருகின்றனர்.


இப்படி இருப்பது, மிகவும் தவறானது. அது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இப்படி சாப்பிட்டு, சாப்பிட்டு தூங்குவதால், கண்டிப்பாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் எளிதாக சிறிய வயதிலேயே ஏற்படும்.


ஏற்கனவே இந்த நோய்களால் அவதியடைந்து வருபவர்களுக்கு இன்னும் அதிகரிக்கும். இப்படி ரத்த அழுத்தம், கொழுப்பு போன்றவை அதிகரிப்பதால் அடுத்தாக இதயநோய் ஏற்படும். எனவே கொரோனாவிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வீடுகளில் இருக்கும் நாம், மற்ற நோய்களுக்கு ஆளாகிவிட கூடாது.

 சாப்பிட்டு தூங்குவது பெரும் ஆபத்தை உருவாக்கும்.எனவே கண்டிப்பாக யோக செய்ய வேண்டும். யோகா செய்வதற்கு எந்த கருவிகளும் தேவையில்லை. நமது உடலும், சிறிது இடமும் இருந்தால் போதும். யோகா தெரியாதவர்கள், யூடியூப் போன்றவற்றில் இருந்து பார்த்து அதன்படி செய்யலாம்.


 புதியதாக யோகா செய்பவர்கள் 15 நிமிடம் செய்தால்கூட போதுமானது. ஏற்கனவே யோக தெரிந்தவர்கள் ஒரு மணி நேரமாவது யோகா பயிற்சி செய்ய வேண்டும். இதை தவிர்த்து வயதானவர்கள், யோகா செய்ய முடியாதவர்கள் வீட்டிற்குள்ளையே நடக்கலாம். 8 வடிவில் நடந்து பழகலாம். இதனால் உடல் ஆரோக்கியமாகும். நமக்குள்ள பயத்தையும் போக்க உதவும், எதிர்ப்பு சக்தி அதிகமாகும். சாப்பிட்டவுடன் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.


இப்படி ஏதும் செய்யாமல் இருந்தால், தொப்பை அதிகமாகும். கொழுப்பு அதிகரிக்கும். இளம் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னை ஏற்படும். எனவே தினமும் உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது.


 காலை 10 மணிக்குள் வருகிற வெயிலில் நம் உடல் மேல் படுவதால் வைட்டமின் டி உடலுக்கு கிடைக்கிறது. எனவே தினமும் காலையில் எழுந்ததும் வெயில் படும்படி நிற்க வேண்டும்.


 கொரோனா சுவாச பகுதிகளை தாக்குவதால், மூச்சு பயிற்சி எனப்படும் பிராணயமா செய்ய வேண்டும். மூச்சை உள்ளே இழுத்து, வெளி விடுவதே பிராணயமா எனப்படும், அதனை தினமும் செய்ய வேண்டும். தற்போது மூன்று வேளையும் முழுமையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உணவில் கட்டுப்பாடு வேண்டும்.


ஏன்னென்றால் நாம் பழைய மாதிரி வெளியே செல்வதில்லை. அதனால் உணவை குறைத்து கொள்ள வேண்டும். சாப்பிடும் உணவில், இஞ்சி, மிளகு, பூண்டு, மஞ்சள், பெருங்காயத்தை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


எப்போது காய்ச்சல் வந்தாலும் ரசம் சாப்பிட சொல்வார்கள், ஏன்னென்றால் அதில் இஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள், பெருங்காயம் சேர்க்கப்படுவதால் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். தற்போது குழந்தைகளுக்கு தினமும் ரசம் கொடுக்க வேண்டும்.


 மேலும் கசாயம் கொடுக்கலாம், கபசுர கசாயமும் கொடுக்கலாம். அப்படி கபசுர குடிநீர் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் வீட்டிலேயே இஞ்சி, மஞ்சள், மிளகு, திப்பிலி, அதிமதுரம், துளசி வைத்து கசாயம் செய்து தினமும் சூடாக குடிக்கலாம். இவைகள் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதுமட்டுமில்லாமல், கொரோனாவில் இருந்து நம்மை காத்துக்கொள்ள, சுடுதண்ணீர் குடிக்க வேண்டும். பாலில் மஞ்சள் கலந்து குடிக்க வேண்டும். சுட தண்ணீரில் உப்பு சேர்த்து தினமும் மூன்று வேளையும் வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதால், உள்ளே செல்லும் கிருமியை தடுக்க முடியும்.

யோகா, உடற்பயிற்சி, வீட்டுற்குள்ளேயே நடப்பது, காலை வெயிலில் நிற்பது, சுடுநீர் குடிப்பது, உப்பு சேர்த்த சுடுநீரில் வாய் சுத்தம் செய்வது, ஆரோக்கியமான காய்கறிகள், பழம் சேர்த்துக்கொள்வதால் கொரோனாவில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும்


. யாரும் வீட்டிற்குள் சாப்பிட்டு, ஓய்வு எடுக்க வேண்டாம். சாப்பிட உடன் தூங்குவதையோ, டிவி பார்ப்பதையோ தவிர்த்து ஜீரணமாக நடக்க வேண்டும். எதையும் வரும் முன் காப்பது சிறந்தது. இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment