மாணவர் சேர்க்கை தொடக்கம்: அரசுப் பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் ஆர்வம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, August 17, 2020

மாணவர் சேர்க்கை தொடக்கம்: அரசுப் பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் ஆர்வம்

 மாணவர் சேர்க்கை தொடக்கம்: அரசுப் பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் ஆர்வம்

அரசு அறிவித்தபடி அனைத்து வகைப் பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியதை அடுத்து, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தமிழகத்தில் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. 

கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பள்ளிகளை இப்பேதைக்கு திறப்பது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.

 கொரோனா தொற்று முழுமையாக நீங்கிய பிறகு தான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புகளின்படி பள்ளிகள் இப்போதைக்கு திறக்கப்பட மாட்டாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்பதில் பள்ளிக்கல்வித்துறை உறுதியாக இருக்கிறது. 

இதையடுத்து, கடந்த 11ம் தேதி அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, ஆகஸ்ட் 17ம் தேதி (நேற்று) முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 2020-21ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அனைத்து வகை பள்ளிகளில் 1, 6, 9ம் வகுப்புகளில் நடத்தலாம். 

ஒரு பள்ளியில் இருந்து வேறு ஒரு பள்ளிக்கு மாறுவதன் காரணமாக பிற வகுப்புகளில் (12ம் வகுப்பு, 10ம் வகுப்பு) சேரும் மாணவர்களுக்கான சேர்க்கையும் 17ம் தேதி முதல் நடக்கும். அதேபோல அனைத்து மேனிலைப் பள்ளிகளிலும் பிளஸ்1 வகுப்பில் மாணவர் சேர்க்கை 24ம் தேதி முதல் நடக்கும்.


பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கும் நாளில் இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை எளிய மற்றும் நலிந்த பிரிவை சேர்ந்த குழந்தைகளை எல்கேஜி வகுப்புகளில் சேர்ப்பதற்கான பட்டியல்கள் 17ம் தேதி தயாரிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 மாணவர்கள் சேர்க்கையின் போது தமிழக அரசு அறிவித்துள்ள இடஒதுக்கீட்டு விதிகளின்படி உரிய இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கடந்த 12ம் தேதி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டு இருந்தார்.


மேற்கண்ட அனைத்து அறிவிப்புகளின் பேரில் நேற்று தமிழகம் முழுவதும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இதன்படி அரசுப் பள்ளிகளில் நாள் ஒன்றுக்கு 40 மாணவர்கள் என்ற அளவில் சேர்க்கப்படுகின்றனர். 

தற்போது கொரோனா தொற்று நீடித்து வருவதை அடுத்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை 20 மாணவர்களும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 20 மாணவர்கள் என்ற அளவில் சேர்க்கப்படுகின்றனர்.

மாணவர் சேர்க்கையின் போது, மாணவர்களிடம் இருந்து உரிய சான்றுகளை பெற்று சரிபார்க்க ஆசிரியர்கள் பணிக்கு வந்திருந்தனர். அவர்கள் சான்றுகளை சரிபார்த்த பிறகே சேர்க்கை வழங்கப்பட்டது

. கடந்த 5 மாதங்களாக கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கியதால், போதிய வருவாய் இன்றி பலர் கஷ்டப்படுவதால், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்தி தங்கள் குழந்தைகளை சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

அதனால் பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். இதன்படி நேற்று அதிக அளவிலான மாணவர்கள் அரசுப் பள்ளிகள் சேர்க்கை பெற்றனர்.

No comments:

Post a Comment