வரதட்சணை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு10 ஆண்டுகள் சிறை: பேரவையில் முதல்வர் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, September 16, 2020

வரதட்சணை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு10 ஆண்டுகள் சிறை: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

வரதட்சணை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு10 ஆண்டுகள் சிறை: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

வரதட்சணை தொடர்பான மரண வழக்குகளில் குறைந்தபட்ச தண்டனை பத்து ஆண்டுகளாக அதிகரிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.


மத்திய அரசின் அனுமதியைப் பெற்று சட்டத் திருத்தங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி புதன்கிழமை படித்தளித்த அறிக்கை:-

இந்திய தண்டனைச் சட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த தண்டனைகளை மேலும் கடுமையாக்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, வரதட்சணை தொடர்பான மரணங்களுக்கு இப்போது குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகளுக்கு சிறை தண்டனை வழங்க சட்டப் பிரிவு 304 பி வகை செய்கிறது. இந்த தண்டனைக் காலம் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாக அதிகரிக்கப்படும்.

குற்ற நோக்கத்துடன் பெண்களின் ஆடைகளைக் களைந்து மானபங்கம் செய்வோருக்கு சட்டப் பிரிவு 354 -பி அடிப்படையில் குறைந்தபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தக் குற்றத்துக்கு குறைந்தபட்ச தண்டனையாக ஐந்து ஆண்டுகளும், அதிகபட்சமாக 7 ஆண்டுகளுக்குப் பதிலாக 10 ஆண்டுகள் வரையிலும் தண்டனை வழங்க வகை செய்யப்படும்.


தவறான குற்ற நோக்கத்துடன் பெண்களை இரண்டாவது முறையாகவும் பின் தொடர்ந்து குற்றமிழைத்தால் இப்போது ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படுகிறது. இது அதிகபட்சமாக ஏழு ஆண்டுகளாக அதிகரிக்கப்படும்.

ஆயுள் தண்டனை விதிக்கப்படும்:

 பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்கு உட்பட்ட நபர்களை விற்பனை செய்தல் மற்றும் விலைக்கு வாங்குதல் போன்ற செயல்களுக்காக இப்போது அதிகபட்ச தண்டனையாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

இதற்குப் பதிலாக, குறைந்தபட்ச தண்டனையாக ஏழு ஆண்டுகள் வரையும் , அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் வழங்குவதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என்றென்றும் அரணாக தொடர்ந்து தமிழக அரசு நின்று அவர்களைக் காக்கும் என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

No comments:

Post a Comment