கல்லூரி அட்மிஷனுக்கு விதிகளை மீறி அனுமதி: கோவை பாரதியார் பல்கலை மீது குற்றச்சாட்டு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, September 12, 2020

கல்லூரி அட்மிஷனுக்கு விதிகளை மீறி அனுமதி: கோவை பாரதியார் பல்கலை மீது குற்றச்சாட்டு

கல்லூரி அட்மிஷனுக்கு விதிகளை மீறி அனுமதி: கோவை பாரதியார் பல்கலை மீது குற்றச்சாட்டு

கோவை பாரதியார் பல்கலை இணைப்பு கல்லூரிகளில், புதிய பாடப் பிரிவுகளுக்கு அனுமதி கொடுப்பதில், விதிகள் மீறப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

அனைத்து கல்லூரிகளும், தங்கள் வரம்புக்கு உட்பட்ட, பல்கலைகளின் இணைப்புகளில் செயல்படுகின்றன. மாணவர் சேர்க்கை, பாடப்பிரிவு துவக்கம், பேராசிரியர் நியமனத்துக்கு, கல்லூரிகள் சார்பில், பல்கலைகளில் அனுமதி பெற வேண்டும்.


ஒவ்வொரு கல்வியாண்டிலும், புதிய பாடப்பிரிவு துவங்கவும், மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்கும், கல்லூரி நிர்வாகத்தினர், முந்தைய கல்வி ஆண்டில், அக்டோபருக்குள் பல்கலைக்கு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.

ஆனால், இந்த ஆண்டு, பாரதியார் பல்கலை இணைப்பு கல்லூரிகள் சிலவற்றில், புதிய பாடப் பிரிவுகளை துவங்கி மாணவர் சேர்க்கையை நடத்த, ஓராண்டு வரை தாமதமாக விண்ணப்பித்த கல்லூரிகளுக்கும், அனுமதி வழங்க முடிவாகியுள்ளது.

சிண்டிகேட்டில் முடிவு


சில தினங்களுக்கு முன், வீடியோ கான்பரன்ஸ் வழியே நடந்த, பாரதியார் பல்கலையின் சிண்டிகேட் கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 சிண்டிகேட் உறுப்பினராக உள்ள, உயர்கல்வி முதன்மை செயலர் அபூர்வா, சிண்டிகேட் கூட்டத்தில், இதற்கான கருத்துருவை முன் வைத்துள்ளார்.

அதாவது, புதிய பாடப்பிரிவுகளில் மாணவர்களை சேர்க்க, 2019 அக்டோபருக்குள் விண்ணப்பிக்க தவறிய சில கல்லூரிகள், ஓராண்டு தாமதமாக விண்ணப்பித்து, இந்த ஆண்டே மாணவர்களை சேர்க்க அனுமதி கேட்டுள்ளன.

அதற்கு உறுப்பினர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


விதியை மீறி அனுமதி?

இந்நிலையில், ஒரு ஆண்டு வரை தாமதமாக விண்ணப்பித்த கல்லூரிகளிடம், அதற்கான கூடுதல் அபராத தொகையை மட்டும் வசூலித்து விட்டு, இந்த ஆண்டே மாணவர் சேர்க்கையை நடத்த, சிண்டிகேட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, உறுப்பினர்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்கலையின் இந்த முடிவானது எதிர்காலத்தில், பல்வேறு விதிமீறல் களுக்கு வழிவகுக்கும் என, சிண்டிகேட் உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

இந்த வாய்ப்பை வரும் காலங்களில், மற்ற கல்லூரிகளும் கேட்டால், பாரதியார் பல்கலையின் நிர்வாகத்துக்கு சிக்கல் ஏற்படும்.

விவாதங்களுக்கு கல்தா

மேலும், சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிப்பதற்கு, பல முக்கிய பிரச்னைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.பெரியார் பல்கலையில், பணிக்கு சேர்ந்த பேராசிரியர் ஒருவர் அளித்துள்ள பணி அனுபவ சான்றிதழில், பிஎச்.டி., படித்து கொண்டிருந்த காலத்திலேயே, பேராசிரியராக பணியாற்றியதாக, முன்னுக்கு பின் முரண்பாடான தகவல்கள் இருந்துள்ளன.

பாரதியார் பல்கலையிலும், அவர் பணியாற்றியதாக குறிப்பிட்டுள்ளதால், அது குறித்து விசாரிக்க வேண்டும் என, உறுப்பினர்கள் வலியுறுத்திஉள்ளனர்

.அதேபோல், பாரதியார் பல்கலையில், அனுபவமிக்க மூத்த பேராசிரியர்களை பணியில் நியமிப்பது குறித்தும், விவாதங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆனால், இந்த பிரச்னைகளை பேச, சிண்டிகேட் கூட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப் படுகிறது.

அதேநேரம், விதிகளை பின்பற்றாமல், தாமதமாக விண்ணப்பித்த கல்லூரிகளுக்கான பிரச்னைக்கு முன்னுரிமை அளித்து, அந்த கல்லூரிகளுக்கு சாதகமாக, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 இந்த முடிவில், உள்நோக்கம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல்கலை ஆசிரியர் சங்க மாநில தலைவர் பசுபதி கூறியதாவது:

மாணவர் சேர்க்கை அனுமதி பெற, ஓராண்டு தாமதமாக விண்ணப்பித்த கல்லுாரிகளுக்கு, விதிகளை மீறி அனுமதி தரக் கூடாது. பாரதியார் பல்கலையில்,இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என,எனக்கு தெரியாது. அவ்வாறு முடிவு எடுத்தால், அது பல்கலை விதிகளுக்கு முரணானது.

சிண்டிகேட் உறுப்பினர் என்ற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, விதிகளை மீறி செயல்பட பல்கலை விதிகளில் இடமில்லை. எனவே, அந்த முடிவை வாபஸ் பெற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment