சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் அவதி - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, October 15, 2020

சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் அவதி

 சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் அவதி


வருவாய் கோட்டத்தில், ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு நேற்று வரை ஓய்வூதியம் கிடைக்காததால் கடும் சிரமப்படுகின்றனர்.


திருத்தணி வருவாய் கோட்டத்தில், திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு மற்றும் ஆர்.கே.பேட்டை ஆகிய, நான்கு ஒன்றியங்களில், ஓய்வு பெற்ற பள்ளி சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் மற்றும் உதவியாளர் என, மொத்தம், 1,200க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.இவர்களுக்கு, அந்தந்த ஒன்றிய நிர்வாகத்தின் மூலம், மாதம், தலா, 2,000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. 


ஒவ்வொரு மாதமும், முதல் தேதியில், ஓய்வூதியம் வழக்கமாக ஓய்வூதியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.இந்நிலையில், கடந்த மாதத்திற்கான ஓய்வூதியம், 15 நாட்கள் ஆகியும், நேற்று வரை சத்துணவு ஊழியர்களுக்கு வரவில்லை.


இதனால், சத்துணவு ஓய்வூதியர்கள் அன்றாட செலவுகளுக்குகூட பணம் இல்லாமல் தவிக்கின்றனர். ஓய்வூதியர்கள் பலமுறை ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை என, ஓய்வூதியதாரர்கள் புலம்புகின்றனர்.


இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது:ஒவ்வொரு மாதமும், பள்ளி சத்துணவு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, மாதம் கடைசி நாள் அல்லது முதல் தேதியில், ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.


கடந்த மாதம், ஓய்வூதியம் மட்டும் இதுவரை வழங்காததற்கு காரணம், கருவூலக அலுவலகத்தில் இந்த மாதம் முதல், புதிய நடைமுறை அமல்படுத்திஉள்ளது.


மேலும், ஓய்வூதியம் போடும், 'சாப்ட்வேர்' சரியாக வேலை செய்யாததால், ஓய்வூதியம் போடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இன்னும் மூன்று நாட்களுக்குள் அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் சம்பளம் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment