மரபணு மாறிய புதிய வைரசால் என்ன பாதிப்பு? - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, December 22, 2020

மரபணு மாறிய புதிய வைரசால் என்ன பாதிப்பு?

 மரபணு மாறிய புதிய வைரசால் என்ன பாதிப்பு?


‌ புதிய வைரசால் என்னென்ன பாதிப்பு வரலாம்என்பது குறித்து, மதுரை அரசு மருத்துவ கல்லுாரி மைக்ரோ பயாலஜி துறை உதவி பேராசிரியர்சூர்யகுமார் விளக்கம் அளித்துள்ளார்.


‌ வைரஸ் மரபணு மாற்றம் அடைவது ஏன்? ‌


உலகின் அனைத்து உயிர்களும் வாழவே விரும்புகின்றன. அப்படி தான், வைரஸ் நுண் கிருமியும். இது, தனக்கு ஆபத்து நேரும் போது, மரபணு வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தி, புதிய ரூபம் எடுக்கும். 


இதை மரபணு மாற்றம் அல்லது மரபணு பிறழ்வு என, சொல்லலாம். இப்போது உயிர் வாழ்வதற்காக, கொரோனா வைரஸ் எடுத்திருக்கும் ஆயுதமும் இது தான். இது, முதன் முறையல்ல. கடந்த, 2019 டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், பிப்ரவரியில் மரபணு மாறியது. அதன் பிறகு, செப்டம்பரில் மாற்றம் அடைந்துள்ளது. இப்புதிய வைரசுக்கு, 'வேரியன்ட் அண்டர் இன்வெஸ்டிகேஷன் 202012~01' என, பெயரிட்டுள்ளனர்.


மரபணு மாறியது, 2020 டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது, இது என்ன வகையில் தாக்குதலை ஏற்படுத்தும் என்பதற்கான ஆராய்ச்சி நடப்பதையும் குறிக்கும் வகையில், தற்காலிகமாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.


‌ இப்புதிய வைரசால் பாதிப்பு தீவிரமாகுமா? ‌


பொதுவாக வைரசின் உடலில், எங்கு வேண்டுமானாலும் மாற்றம் நிகழலாம்.இம்முறை வைரசின் கிரீடம் போன்ற புரத அமைப்பில் மாற்றம் நிகழ்ந்துள்ளது


. இப்பகுதி தான், நம் செல்களுக்குள் வைரஸ் நுழைய உதவி செய்கிறது. மாற்றம் அடைந்த பின், செல்களுக்குள் நுழையும் திறன் தீவிரமடைந்துள்ளது. இதனால், முன்பை விட எளிதில் தாக்கும் தன்மையை பெற்றுள்ளது. எனவே தான், ஏற்கனவே இருந்த வைரசை விட வேகமாக பரவுகிறது. இருப்பினும், முன்பை விட அதிக இறப்பை ஏற்படுத்தும் அளவு வீரியம் அதிகரிக்கவில்லை. எனவே பீதி தேவையில்லை; ஆனால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.


‌ மரபணு மாறி இருப்பதால், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனையில் இந்த வைரஸை அடையாளம் காண முடியுமா? ‌


வைரசின் உடலில், எஸ்., என்., ஆர்.டி.ஆர்.பி., இஜீன் என, பல மரபணுக்கள் உள்ளன.


 நாம் மேற்கொள்ளும், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை முறையில், கொரோனா வைரஸின் இஜீன், ஆர்.டி.ஆர்.பி., என்ற மரபணுக்களை அடையாளம் காண்கிறோம். தற்போது 'எஸ்' என்னும் மரபணுவில் தான், கொரோனா வைரஸ் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆர்.டி.ஆர்.பி., இஜீன் மரபணுக்கள் இன்னும் அப்படியே தான் உள்ளன. எனவே, நாம் மேற்கொள்ளும் பரிசோதனை முறையில் துல்லியமாக கண்டுபிடிக்கலாம்.


 'எஸ்' வகை மரபணுவை மையப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளும் நாடுகளில், இதை, கண்டுபிடிக்க முடியாது. அந்த நாடுகளும் ஆர்.டி.பி.சி.ஆர்., சோதனைக்கு மாற வேண்டியது கட்டாயம்.


‌ இப்போதுள்ள தடுப்பூசிகள் புதிய வைரஸை தடுக்குமா, சிகிச்சை முறைகளில் மாற்றம் வேண்டுமா? ‌


கொரோனா பாதிப்பிற்கென்று தனி சிகிச்சை இல்லை. எனவே, புதிய வைரசுக்கும் வழக்கமான சிகிச்சை முறை, தனிமைப்படுத்துதல் போதும். ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் புதிய கொரோனா வைரசை தடுக்குமா என்பது சந்தேகம்.


ஏனென்றால், மனித செல்லுக்குள் நுழைய வைரஸ் பயன்படுத்தும், ஸ்பைக் புரதம் பகுதியை தான் தடுப்பூசிகள் தடுக்கும். 


இப்போது, ஸ்பைக் புரதம் பகுதியில் மரபணு மாறி இருப்பதால், இதை தற்போதுள்ள தடுப்பு மருந்துகளால் அடையாளம் காண முடியுமா என்பது, மில்லியன் டாலர் கேள்வி.இது குறித்த ஆராய்ச்சிகள் துவங்கி விட்டன. முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும்.


‌ 'ஐரோப்பிய விமானங்களுக்குதடை விதிக்க வேண்டும்' ‌


கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவியதற்கு, விமான சேவையின் பங்கு முக்கியம். இதிலிருந்து, இந்தியா பாடம் கற்க வேண்டும். ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இருந்து, மரபணு மாறிய வைரஸ் பிற நாடுகளுக்கும் பரவுகிறது. பல்வேறு நாடுகள் இங்கிருந்து, விமான சேவைக்கு தடை விதித்து விட்டன. எப்போதுமே, இரண்டாவது அலை என்பது ஆக்கிரோஷமாகவே இருந்திருக்கிறது. 


எனவே, இந்தியாவிற்கு இப்பாதிப்பு வந்தால், முன்பை விட வேகமாக பரவும். அதை விட முக்கியம், இறப்பு விகிதமும் கணிசமாக இருக்கும். எனவே, இப்போதே சுதாரிப்பது முக்கியம். பிரிட்டன் மட்டுமின்றி மொத்த ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், விமானங்களை அனுமதிக்கக் கூடாது. அங்கு வசிக்கும் இந்தியர்களும் நாடு திரும்ப முயற்சிக்காமல், அங்கேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்.


 அவர்களுக்கு தேவையான வசதிகளை, இந்திய அரசு செய்து கொடுக்க வேண்டும். புதிய வைரஸ் பாதிப்பு பகுதிகளில் இருந்து விமானங்களை அனுமதிப்பது, விஷப் பரிட்சைக்கு சமம்.


~ டாக்டர் செந்தில், தலைவர், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம்

No comments:

Post a Comment