பழைய ரூ.100 செல்லாதா? ரிசர்வ் வங்கி தகவல்
'பழைய, 5, 10 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற உள்ளதாக வெளியான தகவல் தவறு' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சமீபத்தில் சமூக ஊடகங்களில், பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுவதாக தகவல் வெளியானது. 'மார்ச், 21க்குள் பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து, புதிய ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் அவற்றை மாற்ற முடியாது; அவை செல்லாததாகி விடும்' என, அந்த செய்தியில் தெரிவிக்கப் பட்டிருந்தது. இதனால், ஏராளமானோர் பழைய, 5, 10, 100 ரூபாய் நோட்டுக்களுடன் வங்கிகளுக்கு படையெடுத்தனர்.
அவர்களை, 'அதுபோல உத்தரவு எதுவும் வரவில்லை' என, வங்கிகள் திருப்பி அனுப்பி வந்தன. இதைஅடுத்து, பழைய, 5, 10 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் ரத்தாகாது' என, மத்திய அரசு, நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது. ஆனால், ரிசர்வ் வங்கி எதுவும் தெரிவிக்காதது, குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று ரிசர்வ் வங்கி, 'டுவிட்டரில்' வெளியிட்ட அறிக்கை:சமீபத்தில், பழைய, 100, 10, 5 ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்படுவதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. இது தவறான செய்தி. இதை யாரும் நம்ப வேண்டாம். பழைய ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் கிடையாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment