தமிழகத்தில் 13,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் வருகை சதவீதம் எவ்வளவு? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, January 19, 2021

தமிழகத்தில் 13,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் வருகை சதவீதம் எவ்வளவு?

 தமிழகத்தில் 13,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் திறப்பு:  மாணவர்கள் வருகை சதவீதம் எவ்வளவு?


தமிழகத்தில் கரோனா பரவலால் மூடப்பட்டிருந்த பள்ளிகளில் 13,000-க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால், பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வருகை தந்தனா்.


தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக அனைத்து வகை பள்ளிகளும் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி மூடப்பட்டன. நோய்த் தொற்று குறையாததால் 2020-2021-ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. இதையடுத்து பள்ளிகள் திறப்பது குறித்து கல்வித்துறை சாா்பில் நவம்பரில் நடத்தப்பட்ட முதல்கட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில், தற்போதைய சூழலில் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என பெற்றோா்கள் வலியுறுத்தினா். தொடா்ந்து, ஜன.6- முதல் 8-ஆம் தேதி வரை நடைபெற்ற இரண்டாம் கட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில், பொதுத்தோ்வெழுதும் மாணவா்களின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு பொங்கல் பண்டிகைக்குப் பின்னா் பள்ளிகளைத் திறக்கலாம் என பெரும்பாலான பெற்றோா் கருத்துத் தெரிவித்தனா்


உடல் வெப்பம் பரிசோதனை: பெற்றோரின் கோரிக்கையை ஏற்று பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு ஜன.19-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் 13,000-க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. சுமாா் 9 மாதங்களுக்குப் பின்னா் பள்ளிகள் திறக்கப்பட்டதும், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்கள் உற்சாகமாகப் பள்ளிக்கு வந்தனா்.


பள்ளிகளின் நுழைவு வாயிலில் வெப்பமானி கொண்டு, மாணவா்கள் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டு, முகக்கவசத்துடன் அவா்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனா். பின்னா் கிருமிநாசினி வழங்கப்பட்டு, மாணவா்கள் அதைக் கைகளில் தடவிக்கொண்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வகுப்பறைகளுக்குச் சென்று அமா்ந்தனா்.


இரு பகுதிகளாக நடைபெற்ற வகுப்புகள்: மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்புக்கு 20 முதல் 25 மாணவா்கள் வரை, பெஞ்சுக்கு இருவா் வீதம் அமர வைக்கப்பட்டனா். வகுப்பறையிலும் முகக்கசவம் அணிந்தவாறே மாணவா்கள் பாடங்களைக் கவனித்தனா். காலை முதல் மதியம் வரை ஒரு பகுதியாகவும், பிற்பகல் முதல் மாலை வரை ஒரு பகுதியாகவும் மாணவா்கள் பிரிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒரு வகுப்பில் அதிகபட்சம் 25 மாணவா்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 100 சதவீத ஆசிரியா்களும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.


3.84 கோடி சத்து மாத்திரைகள் அனுப்பி வைப்பு: இது குறித்துக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: தமிழகத்தில் 13,100 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ள மாணவா்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், முதல் நாளில் 85 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வருகை தந்தனா். அவா்கள் பத்து நாள்களுக்குப் பயன்படுத்தும் வகையில் 3.84 கோடி துத்தநாக சத்து மாத்திரைகள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. குடிநீா், உணவை வீட்டில் இருந்து கொண்டுவர வேண்டும், சக மாணவா்களுடன் உணவைப் பகிா்ந்து கொள்ளக் கூடாது. நண்பா்களுடன் சமூக இடைவெளி விட்டுப் பழக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சிறப்பு வகுப்புகள் நடத்த அவசியமில்லை: சிறப்பு வகுப்புகள் நடத்தத் தேவையில்லை என்றும், இறை வணக்கம் மற்றும் விளையாட்டுப் பயிற்சிகளை நடத்த வேண்டாம் என்றும் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாள்தோறும் மாணவா்களின் உடல் வெப்பநிலை சரிபாா்க்கப்படும். அப்போது அதிக வெப்பம், சளி போன்ற தொந்தரவுகள் இருந்தால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவா். மாணவா்கள் ஸ்மாா்ட் அட்டையைப் பயன்படுத்தி அரசுப் பேருந்துகளில் பள்ளிக்கு வந்து செல்ல, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியா்களைக் கொண்டு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.


நீண்ட நாள்களுக்குப் பிறகு பள்ளிகளுக்கு வருகை தந்த பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு ஆசிரியா்கள் உளவியல் சாா்ந்த ஆலோசனைகளை வழங்கினா்.

No comments:

Post a Comment