அசத்தும் வயது வந்தோர் கல்வித்திட்டம் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, January 9, 2021

அசத்தும் வயது வந்தோர் கல்வித்திட்டம்

 அசத்தும் வயது வந்தோர் கல்வித்திட்டம்


அ'னா... 'ஆ'வன்னாவில் துவங்கி, அடிப்படை கல்விக்கு அச்சாரமிட்டு வருகின்றனர் குடிமங்கலம் பகுதி முதியவர்கள்.


அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், புதிதாக வயது வந்தோர் கல்வித்திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு அடிப்படைக்கல்வி அளிப்பது நோக்கமாக உள்ளது.


ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், தொண்டு நிறுவனங்கள், ஜேஆர்சி, என்.எஸ்.எஸ்., சாரணர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளில் உள்ள மாணவர்கள், தன்னார்வல பெண்கள் உள்ளிட்டோர், ஒவ்வொரு பகுதியிலும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்


.உடுமலை கல்வி மாவட்டத்தில், குடிமங்கலம் வட்டாரத்தில், 30 மையங்களில் இத்திட்டம் நடக்கிறது. பாடம் நடத்தப்படும் பள்ளி, கற்போம் எழுதுவோம் மையமாக வழங்கப்படுகிறது. புதிய வயது வந்தோர் கல்வித்திட்டம், கிராமங்களில் தற்போது புதுமையை ஏற்படுத்தி வருகிறது.


கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில், குழந்தைகளின் அடிப்படைக்கல்விக்கு மட்டுமே அரசு உறுதி அளித்து வந்தது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், அடிப்படை கற்றல் அனைவரின் தேவையாகவும் உள்ளது. 


இதற்கேற்ப முதியவர்களும், இத்திட்டத்தின் வாயிலாக மாற்றம் நிறைந்த உலகை, புதிய மாற்றத்தோடு சந்திக்க களமிறங்கியுள்ளனர்.


குடிமங்கலம் ஒன்றியத்தில் ஒவ்வொரு மையத்திலும், இரண்டு மணிநேரம் வகுப்புகள் திட்டமிடப்பட்டு, கற்போரின் வசதிக்கேற்ப, ஆசிரியர்கள் வகுப்புகளை அட்டவணையிட்டு நடத்துகின்றனர்.


பலரும், விவசாயப்பணிகள், வேலைஉறுதி திட்டப்பணிகளுக்கு செல்வதால், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் அவர்களை தேடிசென்று, வகுப்புகளுக்கு அழைத்து வருகின்றனர்.


ஆசிரியர் பயிற்றுனர்கள் கூறுகையில், 'அ'னா, 'ஆ'வன்னா படிச்சு பட்டம் தான் வாங்கப்போறோமா, ஜில்லா கலெக்டர் தான் ஆகப்போறாமாம்னு, அலட்சியத்தோட, வகுப்புகளுக்கு வந்தவங்க, இப்ப, ஆர்வத்தோடு வர ஆரம்பிச்சுருக்காங்க.


 எல்லாமே டிஜிட்டல் மயமாக மாறிவருவதால், அடிப்படை கற்றல் அவசியங்கிறத புரிய வைக்கிறோம். வங்கி, அஞ்சலகம், ஏ.டி.எம்., போன்ற இடங்களில், ரகசிய எண், தொகை எழுவது, கையெழுத்து போடுவதை, தற்போது பலரும் கற்றுக்கொண்டனர்.  


குறிப்பாக, அவங்களோட, மொபைல் எண், எழுத பயிற்சி பெற்று வருகின்றனர். அடிப்படைக்கற்றல் அனைத்துக்குமே அடிப்படைங்கிறத புரிஞ்சுக்க முயற்சி பண்றாங்க,' என்றனர்.

No comments:

Post a Comment