தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் தமிழில் பொறியியல் பாடம் நடத்த அனுமதி: AICTE உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, May 28, 2021

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் தமிழில் பொறியியல் பாடம் நடத்த அனுமதி: AICTE உத்தரவு

 தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் தமிழில் பொறியியல் பாடம் நடத்த அனுமதி: AICTE உத்தரவு


தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ் மொழியில் பொறியியல்   பாடங்களை நடத்தலாம் என்று அகில  இந்திய தொழில் நுட்பக் கல்வி கழகம் அனுமதி அளித்துள்ளது.


 தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு பொறியியல் பட்டம் படிக்கும் மாணவர்கள் விரும்பினால் தமிழ் மொழியில் படிக்கலாம் என்று மாநில அரசு அறிவித்தது. அதன்படி பல ஆயிரம் மாணவர்கள் தமிழ் வழியில் பொறியியல் பட்டம் படிக்க முன்வந்தனர். இந்நிலையில் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தமிழ் வழிக் கல்வியில் அவ்வளவாக அண்ணா பல்கலைக் கழகம்  ஆர்வம் காட்டவில்லை. இதனால் அடுத்தடுத்த ஆண்டுகளில்  தமிழ் வழியில் இன்ஜினியரிங் கல்வியில் மாணவர்கள் சேர்வதை தவிர்த்து வந்தனர். 


தற்போது, அகில இந்திய தொழில் நுட்பக் கழகம்(ஏஐசிடிஇ) தானாகவே  முன்வந்து 8 பிராந்திய மொழிகளின் மூலம் பொறியியல் பாடங்களை கல்லூரிகளில் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது


இது குறித்து அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழக தலைவர் அனில் சகஸ்ரபுத்தே கூறியதாவது: மராத்தி மொழியில் 2020-2021ம் கல்வி ஆண்டில் ஜூன் மாதம் முதல் பொறியியல் பாடங்களை நடத்தலாம்.


 மற்ற மொழிகளை பொறுத்தவரையில் இந்தி, பெங்காலி, தமிழ், குஜராத்தி, கன்னடா மற்றும் மலையாள மொழிகளிலும் நடத்திக் கொள்ளலாம். இதன் மூலம் ஊரக மற்றும் மலை வாழ் பகுதியை சேர்ந்த மாணவ -மாணவியர் பயன் பெறுவார்கள். பொறியியல் பாடங்கள் ஆங்கில மொழி வழியாக கற்பிக்கப்படுவதால், நன்றாக படிக்கின்ற மாணவர்கள் கூட ஆங்கில மொழியின் மீதுள்ள அச்சம் காரணமாக அதை படிக்க விரும்பாமல் வெளியேறும் சூழ்நிலை உள்ளது. 


அதனால் அவரவர்கள் தாய் மொழியில் பாடங்களை கற்பிக்கும் போது, அந்த பாடங்களின் அடிப்படி கருத்துகளை அதிகமாக கிரகித்துக் கொள்ள முடியும், அதனால் தான் ஏஐசிடிஇ தொழில் நுட்ப பாடங்களை அந்தந்த தாய் மொழியில் வழங்க  முன்வந்துள்ளது


மேலும், நாடு முழுவதிலும்  இருந்து 500க்கும்  மேற்பட்ட விண்ணப்பங்கள் எங்களுக்கு வந்தது.அதன் பேரில் பொறியியல் இளநிலை பட்டத்தை எதிகாலத்தில் 11 மொழிகளின்  வழியாக வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.


அதற்காக பொறியியல் பாடத்திட்டத்தையும், பாடங்களையும்  இந்த மொழிகளில் வழங்கப்படும்.


 அத்துடன் மாணவ மாணவியரே தாங்களே முன்வந்து இந்த பாடங்களை படிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்.  புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரையின் அடிப்படையில், ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இளநிலை பட்டத்தை பொறுத்தவரையில், மெக்கானிக்கல், பொறியியல், சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் சில பாடங்களில் வழங்கப்படும். தமிழகத்தில் இது குறித்து ஏஐசிடிஇ சார்பில் ஒரு சர்வே நடத்தப்பட்டது. 


அதில் ஆங்கில மொழி அல்லது தமிழ் மொழி இவற்றில் எதை மாணவ மாணவியர் விரும்புகிறார்கள் என்பதை அறிய முற்பட்டபோது, 42 சதவீத மாணவ மாணவியர் தங்கள் தாய் மொழியில் பொறியியல் பாடங்களை படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.


அதன்பேரில் அனைத்து கல்லூரிகளும் பிராந் திய மொழியில் பாடங்களை நடத்துவதற்கு ஏற்ப  தங்கள் விதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடு களை செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஐ சிடிஇ-ன் மென்பொருள் மூலம் ஆங்கிலத்தில் உள்ள எந்த புத்தகத்தையும் 22 மொழிகளில் மொழி பெயர்க்க முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விரைவில் அனைத்து பொறியியல் பாடங்களையும் 22 மொழிகளில் மொழி பெயர்க்கும்  வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


 அத்துடன் பொறியியல் பாடங்களில் இடம் பெறும் 10 ஆயிரம் தொழில் நுட்ப சொற்களுக்கு பொருள் காணும் வகையிலான அகராதியையும் ஏஐசிடிஇ மென் பொரும் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


ஏஐசிடிஇ-ன் மென்பொருள் மூலம் ஆங்கிலத்தில் உள்ள எந்த புத்தகத்தையும் 22 மொழிகளில் மொழி பெயர்க்க முடியும்.

* தமிழகத்தில் ஏஐசிடிஇ சார்பில் நடத்தப்பட்ட சர்வேயில், 42% மாணவ மாணவியர் தங்கள் தாய் மொழியில் பொறியியல் பாடங்களை படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.


* பொறியியல் பாடங்களில் இடம் பெறும் 10 ஆயிரம் தொழில் நுட்ப சொற்களுக்கு பொருள் காணும் வகையிலான அகராதியையும் ஏஐசிடிஇ மென்பொருள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment