உலகின் சிறந்த கல்வி நிறுவனப் பட்டியலில் ஒரு இந்திய நிறுவனம் கூட இடம்பெறவில்லை - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, May 11, 2021

உலகின் சிறந்த கல்வி நிறுவனப் பட்டியலில் ஒரு இந்திய நிறுவனம் கூட இடம்பெறவில்லை

 உலகின் சிறந்த கல்வி நிறுவனப் பட்டியலில் ஒரு இந்திய நிறுவனம் கூட இடம்பெறவில்லை


உலகின் சிறந்த கல்வி நிறுவனப் பட்டியலில் இந்தியாவைச் சோ்ந்த ஒரு கல்வி நிறுவனம் கூட இடம்பெறவில்லை என சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.


சேலத்தில் உள்ள அன்னபூா்ணா பொறியியல் கல்லூரி, தன்னாட்சி அந்தஸ்து கோரி கடந்த பிப்ரவரி மாதம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும், பல்கலைக்கழக மானிய குழுவுக்கும் விண்ணப்பித்தது. மாணவா்களின் தோ்ச்சி சதவீதத்தின்படி இந்த விண்ணப்பத்தை நிராகரித்த பல்கலைக்கழகம், தனது முடிவு குறித்த தகவலை பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் தெரியப்படுத்தியது.


அண்ணா பல்கலைகழக உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தன்னாட்சி அந்தஸ்து வழங்குவது தொடா்பான மனுவை பல்கலைக்கழக மானியக்குழு சுதந்திரமாக பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிடக் கோரியும் அன்னபூா்ணா பொறியியல் கல்லூரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது


இந்த வழக்கு நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது.


அப்போது, அன்னபூா்ணா கல்லூரி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், தோ்ச்சி சதவீதம் மற்றும் மாணவா்கள் சோ்க்கை அடிப்படையில் விண்ணப்பத்தை நிராகரித்தது தவறு. முழுமையான முடிவு எடுப்பதற்கான அதிகாரம் பல்கலைக்கழகம் மானிய குழுவுக்குத் தான் உள்ளது என்று உயா்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற தீா்ப்புகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது என்றாா்.


அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், கல்லூரிக்கு இணைப்பு வழங்கும் அதிகாரம் பெற்ற பல்கலைக்கழகத்துக்கு, அதன் செயல்பாடுகளைப் பொறுத்து, தன்னாட்சி அந்தஸ்து வழங்கலாமா? வேண்டாமா? என்று முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது என்று வாதாடினாா்.


அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா், ‘நாட்டிலேயே தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகம் கல்வி சேவையில் சிறந்து விளங்கும் நிலையில், உலகிலுள்ள சிறந்த 200 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து ஒரு கல்வி நிறுவனம் கூட இடம்பெறவில்லை’ என்று தனது கவலையைத் தெரிவித்தாா்.


மேலும் தன்னாட்சி அந்தஸ்து வழங்குவது தொடா்பான விண்ணப்பத்தை பல்கலைக்கழகம் மானிய குழு 2 மாதத்தில் சுதந்திரமாக செயல்பட்டு முடிவு எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.

No comments:

Post a Comment